×

போக்குவரத்து விதிமீறலால் நாளுக்கு நாள் விபத்துகள் அதிகரிப்பு சிறுவர்கள் வாகனம் ஓட்டுவது தடுக்கப்படுமா?

ஆர்.எஸ்.மங்கலம், செப்.26:  ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளில் வாகன ஒட்டிகள் போக்குவரத்து விதிகளை மறந்து விதிமுறைக்கு மாறாக வாகனங்களை இயக்குவதால் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. ஆர்.எஸ் மங்கலம் தாலுகாவில் நாளுக்கு நாள் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே வருகின்றது. இந்நிலையில் வாகன ஓட்டிகள் சாலை விதியை முற்றிலுமாக மறந்து பொருட்களை ஏற்றும் வாகனங்களில் அதிகமான ஆட்களை ஏற்றிச் செல்கின்றனர். இதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதேபோல் டிராக்டர், லாரி போன்ற வாகனங்களில் அளவுக்கு அதிகமாகவும், உயரமாகவும் பாரங்களை ஏற்றிச் செல்கின்றனர். இதுபோன்ற செயல்களால் எதிர்பாராத விதமாக உயிர் சேதம் மற்றும் பொருள் சேதம் ஏற்படுகின்றன. கடந்த ஒரு ஆண்டிற்கு முன்னர் அதிகமான பாரம் ஏற்றிச் சென்ற லாரி, மின் கம்பியில் உரசி தீ பற்றி எரிந்து லாரி சேதமடைந்ததோடு, டிரைவரும் இறந்தார். எனவே இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்கும் விதமாக சட்டத்திற்கு புறம்பாக வாகனங்களை  ஒட்டுபவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘சாலை விதிகள் என ஒன்று இருந்தும் பெரும்பாலானோர் அதனை கடைபிடிப்பதில்லை. போலீசாரும் சோதனையின் போது பெரும்பாலும் ஹெல்மேட் அணியாதவர்களை கண்காணிக்கும் அளவு அதிக பாரம் ஏற்றி செல்வது, சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றி செல்பவர்களையும் கண்டுகொள்வதில்லை. அதேபோல் பள்ளி மாணவர்கள் டூவீலர் ஒட்டுகின்றனர். இதனால் நாடு முழுவதும் நாளுக்கு நாள் விபத்து அதிகம் ஏற்பட்டு வருகின்றது. இதில் விலை மதிப்பெற்ற உயிர்கள் ஒரு நொடியில் போய் விடும் வாய்ப்புள்ளது. ஆகையால் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பாக வாகனங்கள் ஓட்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விபத்து இல்லாத பகுதியாக நமது பகுதியை பாதுகாக்க உதவ வேண்டும்’ என்றார்.

Tags : accidents ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி