×

மூன்று ஆண்டாக தொடர் வறட்சி வடகிழக்கு பருவமழை கை கொடுக்குமா? எதிர்பார்ப்பில் விவசாயிகள்

திருவாடானை, செப். 26:   மாவட்டத்தில் ஒரு லட்சத்து 26 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா பட்டத்தில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பெய்யாமல் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் விவசாயிகள் கடனில் தத்தளித்து வரும் நிலையில், அரசு வழங்கிய பயிர்காப்பீட்டுத் திட்டத்தால் ஓரளவு சமாளித்து வந்தனர். இந்நிலையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை கேரளாவில் கொட்டி தீர்த்த நிலையில் சிறிய அளவிலான மழை ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்துள்ளது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டு பணிகளை முடித்துள்ளனர். விவசாய பணிகளை தீவிரமாக செய்து வந்த போதிலும் கண்மாய் குளங்களில் இன்னும் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்யவில்லை.

பொதுவாக அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை துவங்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் நெல் விவசாயம் விளைச்சலுக்கு வரும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை பொய்த்துப் போனதால் மாவட்டத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு விட்டது. இந்த ஆண்டு எப்படியும் வடகிழக்கு பருவமழை பெய்து விடும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பே சிறிய அளவிலான மழை பெய்யும். அதை வைத்து நேரடி நெல் விதைப்பு முடித்துவிடுவோம். அக்டோபர் மாதத்தில் வடகிழக்கு பருவமழை பெய்தால் மட்டுமே இந்த மாவட்டம் விளைச்சல் நடக்கும். இந்த ஆண்டாவது மழை பெய்யும் என்ற நம்பிக்கை உள்ளது. விவசாய செலவிற்கு பணத்தட்டுப்பாடு உள்ளது. எனவே கடந்த ஆண்டு பயிர் இன்சூரன்ஸ் செய்த விவசாயிகளுக்கு இன்னும் இழப்பீடு வழங்கவில்லை. இந்த இழப்பீட்டை விரைவாக வழங்கினால் உதவியாக இருக்கும் என்றனர்.

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை