×

மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் தொழிலாளர்களை மிரட்டும் கந்து வட்டி கும்பல்கள் புகார் கொடுத்தும் பயனில்லை

பரமக்குடி, செப்.26:  மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கந்து வட்டி தொழில் கொடிகட்டி பறக்கிறது. அசலை திரும்ப செலுத்த முடியாத அளவிற்கு வட்டி வசூலிப்பதால் தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கூலி தொழிலாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் விறகு கரிமூட்டம் போடும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்கள் என பலதரப்பட்ட ஏழை தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். இவர்கள் தாங்கள் செய்யும் வேலைக்கு வாரந்தோறும் கூலி வாங்கினாலும், திடீரென குடும்பத்தில் ஏற்படும் செலவீனங்களுக்கும், மழை காலங்கள், வேலை செய்யும் போது ஏற்படும் விபத்துக்களாலும் வேலை இல்லாமல் வருமானமின்றி இருக்கும் நாட்களில் வட்டிக்கு கடன் வாங்குகின்றனர். இதுபோல் ஏராளமான சிறு வணிகம் செய்யும் சிறுவியாபாரிகள், நடைபாதை வியாபாரிகள், தினசரி மார்க்கெட், வாரச்சந்தை சிறுவியாபாரிகள், தள்ளுவண்டிகளில் வியாபாரம் செய்வோர் என அனைவருமே, குடும்ப தேவைக்கு வட்டிக்கு கடன் வாங்கித்தான் வியாபாரம் செய்ய வேண்டியிருக்கிறது.

மேலும் அவசர தேவைகளுக்கு கடன் வாங்க வங்கிகளோ அடமானம் வைக்க பொருள்களோ ஜாமீன் தர உள்ளூர் வாசிகளோ தயாராக இல்லை. எனவே இவர்கள் கந்து வட்டி கும்பலிடம் தான் கடன் வாங்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. வட்டிக்கு விடும் கும்பலில் உள்ளூரை சேர்ந்த மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சில போலீசார் என சகலரும் உள்ளனர். ரன் வட்டி, மீட்டர் வட்டிக்கு கடன் கொடுக்கும் கும்பல்கள் ஏராளமாக உள்ளனர். கந்து வட்டி கும்பலிடம் கடன் வாங்கும் தொழிலாளி உழைப்பு முழுவதையும் வட்டிக்கு கட்டி விட்டு கடைசியில் குடும்பத்துடன் தற்கொலை செய்யும் நிலையும் ஏற்படுகிறது. இத்தொழிலில் ஈடுபடும் கந்து வட்டி கும்பலிடம் சிக்கி வாழ்க்கையை தொலைத்த குடும்பங்கள் ஏராளம். இப்பிரச்னை தொடர்பாக போலீசார் விசாரித்து, அடையாளம் கண்டு அவர்கள் மீது மாவட்ட எஸ்.பி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறுகையில், துப்புரவு தொழிலாளர்கள், செங்கல் சேம்பர் காளவாசல் தொழிலாளர்கள், கொத்தனார்கள், சித்தாள்கள் என அடிதட்டு மக்களிடம் குறைந்த பணத்தை கொடுத்து விட்டு ஆயிரக்கணக்கில் வட்டி வசூலிக்கும் கும்பல் சில நேரங்களில் ஏடிஎம் கார்டுகளை பறித்து கொள்கிறது. கூடுதல் தொகைக்கு பதிவு செய்யப்பட்ட பிராமிசரி நோட்டுகளை எழுதி வாங்கி வைத்துக்கொண்டு மிரட்டி வசூலிக்கின்றனர். காவல்துறையில் புகார் கொடுத்தாலும் நடவடிக்கை இல்லை. கலெக்டர் கந்துவட்டி கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கிய மழை நீரால் நோய் அபாயம் கமுதி, செப்.26: கமுதி அரசு மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால், கொசுக்கள் உற்பத்தியாகி கொடியநோய்கள் பரவும் அபாயம் உள்ளது.கமுதி அரசு மருத்துவமனை மிகப் பெரிய பரப்பளவு கொண்டது ஆகும். கமுதி சுற்றுவட்டார பகுதியில் உள்ள 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இங்கு வந்து தான் சிகிச்சை ெபறுகின்றனர். ஆனால் அதற்கு ஏற்றவாறு உள்நோயாளிகள், வெளிநோயாளிகள் என நூற்றுக்கணக்கானோர் வரும் இந்த மருத்துவமனைக்கு கட்டிட வசதிகள் குறைவாக உள்ளது.
கட்டிடம் இல்லாத பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி, நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு மிகுந்த பாதிப்பை உண்டாக்கும். இன்னும் மழைக்காலம் துவங்காத நேரத்தில் இப்படி உள்ளது என்றால், மழை அதிகமாக பெய்யும் போது இப்பகுதி மிகவும் மோசமாக யாரும் நடமாட முடியாத அளவிற்கு சேறும் சகதியுமாக மாறி விடும்.

எனவே இதனை சரி செய்ய வேண்டுமென மருத்துவமனை நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் இங்கு பணிபுரியும் மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வெளிநோயாளிகள் மணிக்கணக்கில் காத்திருந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : district ,parts ,
× RELATED தபால் வாக்கு செலுத்த ஏதுவாக போலீசாருக்கு சிறப்பு வாக்கு சாவடி மையம்