×

தா.பேட்டை, தொட்டியம் பகுதியில் உதவித்தொகை புரளி அரசு மருத்துவமனைகளில் வயது சான்றிதழ் பெற திரண்ட மக்கள் நோயாளிகள் அவதி

தா.பேட்டை, செப்.26: தா.பேட்டை, தொட்டியம் பகுதிகளில் முசிறி தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்க உள்ளதாகவும், அது தொடர்பான மனு பெறவுள்ளதாக தகவல் பொதுமக்கள் மத்தியில் வெளியானது. இதையடுத்து சிலர் 40 வயதை கடந்த அனைவருக்கும் ரூ.ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக தவறான தகவலை பரப்பி உள்ளனர். இதனை உண்மை என நம்பிய தா.பேட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும், முதியோர்களும் தொட்டியம் பகுதியை சேர்ந்த பலரும் அதற்கான மனுவினை தயார் செய்ய தொடங்கினர். உதவித்தொகை பெறுவதற்கான மனு ரூ.10ம், மனுவை பூர்த்தி செய்து தருவதற்கு ரூ.50ம் சிலர் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனுடன் ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் புகைப்படம் ஒட்டி வயது சான்றிதழை பெற தா.பேட்டை மற்றும் சோழம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டனர். நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து கொண்டிருந்த மருத்துவர்கள் கூடுதலாக வயது சான்றிதலும் வழங்கினர். இதனால் மருத்துவர்களின் பணிகள் பாதித்தது.

இது குறித்து முசிறி சமூகநல பாதுகாப்பு திட்ட தாசில்தார் மோகன் என்பவரிடம் விளக்கம் கேட்டதற்கு சமூகநலத்துறை சார்பாக 40 வயதை கடந்த அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற திட்டம் எதுவும் அறிமுகப்படுத்தவில்லை. 60 வயதை கடந்த ஆதரவற்ற முதியோர், ஆதவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் அரசு உதவித்தொகை பெறுவதற்கான திட்டங்கள் உள்ளது. அரசின் திட்டங்களினால் பயன்பெறுவதற்கு அரசு விதித்துள்ள விதிமுறைகளுக்கு தாங்கள் தகுதி உள்ளவர்கள் தானா என்பதனை வருவாய்த்துறை அலுவலர்களிடம் நேரில் கேட்டு தங்களது சந்தேகங்களை நிவர்த்தி செய்த பின்னர் தகுதியிருப்பின் விண்ணப்பம் செய்வதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தகுதி உள்ளவர்கள் முறையாக விண்ணப்பம் அளித்தால் பரிசீலனைக்கு பின்னர் உதவித்தொகை வழங்கப்படும். தவறான தகவலை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் என்று கூறினார்.

Tags : Government hospitals ,area ,Thottiyam ,Patti ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு