×

கச்சிராயபாளையம்-வெள்ளிமலை சாலையில் திடீர் மண் சரிவு

சின்னசேலம், செப். 26: கல்வராயன்மலைப்பகுதியில் தொடர்மழை பெய்து வருவதால் தார்சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் பாதிப்பு அடைந்துள்ளனர். கல்வராயன்மலைக்கு செல்லும் கச்சிராயபாளையம் - வெள்ளிமலை சாலை சுமார் 30 கிலோ மீட்டர் நீளத்தில் உள்ளது. இந்த சாலையில் விபத்துகள் ஏற்படாமல் இருக்க சாலையின் ஒருபுறம் தடுப்பு சுவர், கம்பி வேலி அமைத்துள்ளனர். இது மலைக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பாக உள்ளது. ஆனால் சாலையின் மறுபுறம் மலையை குடைந்து தார்சாலை அமைத்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் சாலையோரங்களில் உள்ள மரங்கள் திடீரென விழுந்தால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கிறது. சில நேரங்களில் பாறைகளும் விழுந்து விடுகிறது.

நேற்று முன்தினம்கூட சாலையில் மரங்கள் விழுந்ததால் ஒருமணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கரியாலூர் போலீசார், பொதுமக்களுடன்  வந்து அகற்றிய பிறகே போக்குவரத்து சீரானது. இதனால் சாலை ஓரங்களில் வாகன ஓட்டிகளை பயமுறுத்தும் சாய்வான பாறைகளையும், மரங்களையும் அப்புறப்படுத்த வேண்டும். கல்வராயன்மலைக்கு செல்லும் கச்சிராயபாளையம் - வெள்ளிமலை தார்சாலையை ஒட்டி ஆங்காங்கே மலை கிராமங்களுக்கு செல்லவும், நிலத்திற்கு செல்லவும் மலைமக்கள் மண்பாதை அமைத்துள்ளனர். இந்நிலையில் கல்வராயன்மலையில் மழை பொழிவால் இந்த மண்சாலை வழியே மண்சரிவு ஏற்பட்டு தார்சாலையில் மண் மேடாக தேங்கி நிற்கிறது. இதில் வாகன ஓட்டிகள் வரும்போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைகின்றனர். நேற்று மட்டும் 12க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் விழுந்துள்ளனர். ஆகையால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் அவ்வாறு மண்சரிவு ஏற்படும் இடங்களை கண்டறிந்து தடுப்பு சுவர் கட்ட வேண்டும். இல்லை எனில் அந்த பாதையில் கல் பதித்த சாலை அமைத்து மண் தார்சாலைக்கு வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : collapse ,road ,Kachiralayapalam-Welimalai ,
× RELATED மதுரையில் அமித்ஷா ரோடு ஷோவையொட்டி...