×

2 ஆண்டுகளாகியும் கட்டி முடிக்கப்படாத படுகை அணை

திருக்கனூர், செப். 26:     திருக்கனூர் அருகே உள்ள கெட்டிப்பட்டு சங்கராபரணி ஆற்றின் குறுக்கே கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை மூலம் ரூ.6 கோடி செலவில் படுகை அணை கட்டும் பணி தொடங்கப்பட்டது. இப்படுகை அணையால் நிலத்தடி  நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு தண்ணீர் பற்றாக்குறையை குறைக்கும் பொருட்டு துவங்கப்பட்டது.  ஆனால் இப்பணி முடிவடையாததால் கடந்த ஆண்டு மழை பெய்த போதும் நீரை தேக்கி வைக்க முடியாமல் போனது. தற்போது நிலத்தடி நீர்மட்டம் குறைந்து சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். மேலும், கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர். சங்கராபரணி ஆற்றின் குறுக்கே அடிமட்டத்தில் இருந்து 5 அடி உயரத்திலும், 200 மீட்டர் நீளத்திலும் நீரை தேக்கி வைப்பதற்கு தடுப்பு அணை அமைக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது 80 மீட்டர் நீளம் மட்டுமே சுவர் அமைக்கப்பட்டுள்ளது. மீதம் 120 மீட்டர் அமைக்கப்படாமல் உள்ளது. அடியில் பாறைகள் அதிகம் இருப்பதால் அதனை உடைக்க உடைக்க முடியாமல் சிரமம் ஏற்பட்டதாக ஒப்பந்ததாரர் மற்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

எனவே, இதற்காக நடவடிக்கை எடுத்து, எதிர்வரும் மழைக்காலத்திற்குள் படுகை அணையை முழுமையாக கட்டி முடித்து, நீரை தேக்கி வைப்பதற்கு பொதுப்பணித்துறை துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகளும், மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இன்னும் ஒரு மாதத்தில் தடுப்பணை கட்டி முடிக்கப்படும் என தெரிவித்தனர். இந்நிலையில் இந்த அணையை  நேற்று மாலை மத்திய அரசின் ஜல்சக்தி அபியான் இணை இயக்குனர் கீதா மேனன் மற்றும் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்தனர். படுகை அணையின் விவரம் குறித்து அதிகாரிகளிடம் விரிவாக கேட்டறிந்தனர். இந்த அணையால் எத்தனை விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறித்தும், அணையின் வரைபடத்தை பார்வையிட்டும், பணிகள் குறித்தும் கேட்டறிந்தனர். அப்போது புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர்கள் பாக்கியசாலி, மதியழகன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags : dam ,
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் இன்று துணை கண்காணிப்பு குழுவினர் ஆய்வு