×

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய தீட்சிதர்களை குற்ற வழக்கில் கைது செய்ய வேண்டும்

சிதம்பரம், செப். 26: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆகம விதிகளை மீறிய தீட்சிதர்களை குற்ற வழக்கில் கைது செய்ய வேண்டும் என்று டிஎஸ்பியிடம் மேலும் 2 பேர் புகார் மனு கொடுத்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ராஜசபை என்றழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ம் தேதி நடந்த ஆடம்பர திருமணத்தால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை இரு அமைப்புகளை சேர்ந்த 2 பேர் சிதம்பரம் டிஎஸ்பியிடம் புகார் அளித்தனர். மறுமலர்ச்சி வன்னியர் சங்க நிறுவனத்தலைவர் மணிவண்ணன் டிஎஸ்பி கார்த்திகேயனை சந்தித்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் அவர் கூறியுள்ளதாவது: சிதம்பரம் நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் கடந்த 11ம் தேதி தொழிலதிபர்கள் இல்ல திருமணத்தை கோடிக்கணக்கில் பணம் பெற்றுக்கொண்டு தீட்சிதர்கள் நடத்தி கொடுத்துள்ளனர். மரபுகளையும், ஆகமவிதிகளையும் மீறிய தீட்சிதர்கள் 12 பேரை குற்றவாளிகளாக கருதுகிறோம்.

ஆகையால் அவர்களை குற்ற வழக்கில் கைது செய்ய வேண்டும். மேலும் நடராஜர் கோயிலின் அசையும், அசையா சொத்துகள் மற்றும் கோயில் நிலங்கள், கட்டிடங்கள் அனைத்திற்கும் தனி சட்டம் இயற்றி தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் மேற்பார்வையில் சோழமன்னர்களின் கடைசி வாரிசுகள் மற்றும் சிதம்பரம் நகர அறங்காவல் குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அரியும், சிவனும் ஒரே ஆலயத்தில் உள்ளதால் தீட்சிதர்களால் தடை செய்யப்பட்ட தில்லை கோவிந்தராச பெருமாள் கோயில் பிரமோற்சவ விழா, கொடியேற்றுதல் விழா, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற ஆவன செய்ய வேண்டும். நடராஜர் கோயிலில் நடந்து வரும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் ஊழல் நடைபெறுகிறது. அதனை உடனே தடுத்து நிறுத்தி அறங்காவலர் குழு மூலம் நடத்திட வேண்டும். நடராஜர் கோயிலில் ஊழல், முறைகேடு, அத்துமீறி விதிமீறல் போன்றவற்றையும், 100 ஆண்டு கோயில் நகை, சிலைகள் குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி, சிபிஐ, காவல்துறை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த கோரிக்கைகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அனைத்து கட்சி மற்றும் சிவபக்தர்களை திரட்டி கோயிலை பூட்டும் போராட்டம் நடத்துவோம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதே போன்று ஊழல் எதிர்ப்பு, நுகர்வோர் நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான பேரமைப்பின் மாநில தலைவர் சண்முகம் சிதம்பரம் டிஎஸ்பியிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது: கடந்த 11ம் தேதி நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் நடந்த திருமணத்திற்கு எவ்வளவு பணம் பெறப்பட்டது. அத்தொகை எந்த கணக்கில் வைக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி முறைகேட்டில் தொடர்புடைய கோயில் நிர்வாகிகள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடந்தேறிய நிலையில் கோயில் சித்சபையின் மீதுள்ள பொற்கூரை மேல் ஏறி அலங்காரம் செய்ய வேண்டிய அவசியம் என்ன? விலை மதிப்புமிக்க பொற்கூரையை சுரண்டி தங்கம் களவாடப்பட்டிருக்குமோ என்ற ஐயமும், பொற்கூரையை மட்டுமில்லாது கோயிலின் அரும்பெரும் பொக்கிஷங்கள் களவாடப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக எங்கள் அமைப்பு கருதுகிறது. ஆகையால் மேற்படி சம்பவம் தொடர்பாக காவல்துறை சிறப்பு விசாரணை குழுவை கொண்டு அனைத்து உண்மைகளையும் கண்டறிந்து தவறு செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மனுவில் கூறியுள்ளார். நடராஜர் கோயில் தீட்சிதர்கள் மீது மேலும் 2 பேர் புகார் அளித்துள்ள சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dikshitars ,Chidambaram Natarajar Temple ,
× RELATED சிதம்பரம் நடராஜர் கோயிலில் மேற்கொள்ள...