×

படு பாதாளத்தில் செயல்படும் சித்தா மருந்தகம்: விஷப்பூச்சிகளால் பொதுமக்கள் அச்சம்

வாலாஜாபாத், செப். 26: வாலாஜாபாத்தில் சிதிலமடைந்து, சாலை மட்டத்தில் இருந்து பாதாள பள்ளத்தில் சித்த மருந்தகம் செயல்படுகிறது. அந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துaள்ளனர்.வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இங்கு பஸ் நிலையம், அரசு மருத்துவமனை, மேல்நிலைப் பள்ளிகள், காவல் நிலையம், பேரூராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், வங்கிகள், ரயில் நிலையம், சித்த மருந்தகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்படுகின்றன. வாலாஜாபாத்தில் இருந்து சுங்குவார்சத்திரம் செல்லும் சாலையை ஒட்டி பேரூராட்சி அலுவலகம், நூலகம் அதன் அருகில்  கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சித்தா மருந்தக கட்டிடம் அமைந்துள்ளது. தற்போது இந்த மருந்தக கட்டிடம் ஆங்காங்கே சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. மழை காலங்களில், தண்ணீர் ஒழுகி, அங்கு ஊழியர்கள் பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், மருந்தக கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி கிடப்பதால், பாம்பு உள்பட பல்வேறு விஷப் பூச்சிகள் சர்வ சாதாரணமாக உலா வருகின்றன.
சுங்குவார்சத்திரம் சாலையில் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலையத்தை பொதுமக்கள் கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டதால், அங்கு மேம்பாலம்  கட்டப்பட்டது. இதனால், மேம்பாலத்தின் கீழ் பகுதியில் நூலகம், சித்தா மருந்தகம் ஆகிய கட்டிடங்கள் உள்ளன.

அவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது, சுமார் 4 அடி பள்ளத்தில் உள்ள இந்த கட்டிடங்களில், தூசு மற்றும் புகை பரவுகிறது. அதேபோல், மழை காலங்களில், மழைநீர் இந்த கட்டிடங்களில் புகுந்துவிடுகிறது. மேலும், அந்த கட்டிடங்களை சூழ்ந்து குளம்போல் மாறுவதால், பொதுமக்கள் இங்கு வந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் சுற்றிலும் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ளவர்கள் பெரும்பாலானோர் மூட்டு வலி, கை, கால் குடைச்சல், காய்ச்சல் உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற சித்தா மருந்தகம் வந்து செல்கின்றனர். இங்கு, காய்ச்சலுக்கு நிலவேம்பு கஷாயம் வழங்குவதால் தினமும் நூற்றுக்கு மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். இந்த சூழ்நிலையில் சாலையில் இருந்து 4 அடி பள்ளத்தில் இக்கட்டிடம் உள்ளதால், இறங்குவதற்கும் ஏறுவதற்கும் போதிய வசதிகள் இல்லை. இதனால், முதியவர்கள் இந்த சித்த மருத்துவமனைக்கு வந்து செல்ல தயங்குகின்றனர். மேலும், சில நேரங்களில் சாலையை ஒட்டி நின்று கொண்டு, இந்த பாதையை கடக்க சிலரிடம் உதவி கேட்டு வற்புறுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், இங்குள்ள நூலகம், சித்தா மருந்தகம் ஆகியவற்றுக்கு செல்ல முறையான படிக்கட்டு அல்லது சாய்தளம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags :
× RELATED 100 சதவீதம் வாக்களிப்போம் என தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் உறுதிமொழி ஏற்பு