×

கும்மிடிப்பூண்டி அருகே மின் வாரியத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம்

கும்மிடிப்பூண்டி, செப்.26: ஆரம்பாக்கத்தில் மின்வாரியத்தை கண்டித்து வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏகுமதுரை, தோக்கமூர், பூவலை, ஆரம்பாக்கம் பஜார், பாட்டைகுப்பம், நொச்சிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பம்ப் செட்டுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு சிப்காட் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதியினர் பயன் அடைந்து வந்தனர்.இந்த சூழலில் கடந்த 6 மாத காலமாக திடீர் திடீரென குறைந்த, உயர் மின் அழுத்தம், மின் தடை ஏற்படுவதால் வீடுகளில் பயன்படுத்தும் மின் விசிறி, டிவி, குளிர்சாதன பெட்டி, மிக்சி, கிரைண்டர், மின் விளக்கு என அனைத்தும் பழுதாகின்றன. அதுமட்டுமின்றி வயல்வெளி மற்றும் ஆழ்துளை கிணறுகளில் பொருத்தியிருக்கும் மின் மின்மோட்டார்கள் பழுதானதால், பயிர்களுக்கு நீர்பாய்ச்ச முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். மேலும், மின்விளக்குகள் எரியாததால் தேர்வு நேரங்களில் மாணவ, மாணவிகள் படிக்க முடியாமலும், இரவு நேரத்தில் மின் வீசிறிகள் சரியாக இயங்காததால்  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தூங்க முடியாமலும் கடும் அவதிக்குள்ளாகினர். கடைகளில் இரவு நேரத்தில் மெழுகுவர்த்தி பயன்படுத்த வேண்டியிருந்ததால் வியாபரமின்றி வியாபாரிகளும்,  கடும் பாதிப்புக்கு உள்ளாகினர்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர், மின்வாரிய அதிகாரிகளிடம் பல முறை நேரடியாகவும், மனுக்கள் மூலமும் புகார் செய்தும், மின்சாரத்தை சீராக வழங்க நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த பொதுமக்கள் நேற்று காலை மின்வாரிய அதிகாரிகளுக்கு எதிராக ஆரம்பாக்கம் பகுதியில் கண்டன போராட்டம் நடத்தினர். இதற்கு, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் வியாபாரிகள், தங்கள் கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தனர். மேலும், விவசாய சங்கம் சார்பில் விவசாயிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டனர். முழு கடையடைப்பு நடைபெற்றது.  இந்த போராட்டத்துக்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் கோபால் தலைமை தாங்கினார். திமுக ஊராட்சி செயலாளர்கள் தோக்கமூர் மணி, ஏகுமதுரை மஸ்தான், விவசாய சங்க உறுப்பினர்கள் சேகர், ஆறுமுகம், சிங்காரவேலர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மேற்கு ஒன்றிய செயலாளர் மணிபாலன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில விவசாய சங்க தலைவர் துளசி நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு மின்வாரியத்துக்கு எதிராக பேசினர்.
 தகவல் அறிந்து மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து, பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ஆரம்பாக்கம் பகுதியில் சப்-ஸ்டேசன் அமைத்து சீராக மின்சாரம் வழங்க வேண்டும். பழுதான மின்கம்பங்களையும், மின் கம்பிகளையும் மாற்றி அமைக்க வேண்டும். அத்துடன் உயரழுத்த டிரான்ஸ்பார்மர்களை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதற்கு அதிகாரிகள் தரப்பில்  உயரழுத்த டிரான்ஸ்பார்களை அமைத்து  2 மாத காலத்திற்குள் சீரான மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.   இதை ஏற்ற அப்பகுதியினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். அசம்பாவிதங்கள்  ஏதும் நடைபெறாமல் இருக்க ஆரம்பாக்கம் போலீசார் பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இது குறித்து அப்பகுதியினர் கூறுகையில், மின்வாரிய அதிகாரிகள் அளித்த உறுதி மொழியை 2 மாத காலத்திற்குள் நிறைவேற்றாவிட்டால், மின் கட்டணம் செலுத்த மாட்டோம் என்றனர்.

Tags : Vendors ,protest ,Kummidipoondi ,
× RELATED இன்னொரு முறை பாஜ ஜெயித்தால் தேர்தல்...