×

திருநின்றவூர் ஏரியை தூர்வார 4வது நாளாக போராட்டம்

ஆவடி, செப்.26: திருநின்றவூர் ஏரியை தூர்வார நிதி இல்லை என அதிகாரிகள் கூறியதை கண்டித்து திருவள்ளூர் மத்திய மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பிச்சை எடுக்கும் போராட்டம் 4வது நாளாக நடந்தது. திருநின்றவூர் ஈசா ஏரி 850 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இதன் மூலம் பல ஏக்கர் நிலத்தில் விவசாயம் நடைபெற்று வருகிறது. கடந்த 70 ஆண்டுகளுக்கும் மேலாக தூர்வாரப்படாமல் கிடக்கிறது. இதனால் மழைக்காலத்தில் ஏரியில் போதியளவு நீரை சேமித்து வைக்க முடியவில்லை. மேலும் கோடைகாலத்தில் ஏரி வறண்டு சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து தண்ணீர் பஞ்சம் ஏற்படுகிறது.  இது குறித்து திருநின்றவூர் பேரூராட்சி நிர்வாகம் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்  சாட்டுகின்றனர். மேலும், தற்ேபாத பெய்து வரும் மழைநீர் தேங்கி நிற்பதற்கு, ஏரியை சுற்றி கட்டப்பட்ட தடுப்புச்சுவர் பணி, வடிகால் பணிகள் முற்று பெறாமல் இருப்பதும் மிகவும் முக்கிய காரணமாகும். இப்பணிகளை செய்வதற்கு போதிய நிதி ஆதாரம் இல்லை என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து திருவள்ளூர் மத்திய மாவட்ட பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் திருநின்றவூர் ஏரியை தூர்வாரடவும், மழைநீர் கால்வாய், ஏரியை சுற்றி தடுப்பு சுவர் பணிகளை முடிக்க கோரி பிச்சை எடுத்து நிதியளிக்கும் போராட்டத்தை கடந்த 22ம்தேதி தொடங்கினர். திருநின்றவூர், சி.டி.எச் சாலை காந்தி சிலை அருகே நேற்று கண்டன பொதுக்கூட்டம் நடத்தி நான்காவது நாளாக நிதி திரட்டும்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களிடம் ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் திரண்டு தங்களால் முடிந்த நிதியை அளித்தனர். இந்த போராட்டத்தில் கட்சி நிர்வாகிகள் மைக்கேல்தாஸ், பெரியாரன்பன், வக்கீல் சத்தியமூர்த்தி, ஜெயக்குமார், சங்கர், சார்லஸ், ஜெயபால், கோகுல் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruninavoor Lake ,struggle ,
× RELATED நாடு சந்திக்க இருக்கக்கூடிய 2வது...