×

ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்குவதை தவிர்க்க அம்பத்தூர் உள்பட 3 ஏரிகளில் சுற்றுச்சுவர்

சென்னை: ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்குவதை தவிர்க்க அம்பத்தூர், கொரட்டூர் உள்பட 3 ஏரிகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. இதற்காக, நிதி கேட்டு பொதுப்பணித்துறை சார்பில் தமிழக அரசுக்கு அறிக்கை தாக்கல்  செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 39,202 பெரிய மற்றும் சிறிய ஏரிகள் உள்ளன. இதில், பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 14,098 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் சமீபகாலமாக நகரமயமாதல் காரணமாக, ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ளது. குறிப்பாக, சென்னை போன்ற பெருநகரங்களில் ஏரிகளை ஆக்கிரமித்து ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது. இதனால் ஏரிகளின் பரப்பு நாளுக்குநாள் சுருங்கி குட்டைபோல் மாறிவிட்டது. இந்நிலையில், தற்போது வரை 10,218 ஏரிகள்  ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கி உள்ளது என்பது பொதுப்பணித்துறையின் பதிவேட்டின் மூலம் தெரிய வந்துள்ளது. எனவே இனி வருங்காலங்களில் இந்த ஏரிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்குவதை தவிர்க்கும் வகையில், ஏரிகளில் சுற்றுச்சுவர் அமைக்க பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது.

இதை தொடர்ந்து  பொதுப்பணித்துறை சார்பில் முதற்கட்டமாக அம்பத்தூர், மாதவரம், கொரட்டூர் ஆகிய 3 ஏரிகளில் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பாக அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மற்ற  ஏரிகளிலும் சுற்றுச்சுவர் அமைப்பது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை வட்டாரம் கூறுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘கொரட்டூர், அம்பத்தூர், மாதவரம் ஏரிகளில் ஒரு பகுதி ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கியிருந்தது. அந்த பகுதி தற்போது மீட்கப்பட்டுள்ளது. மீண்டும் அந்த இடம்  ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்குவதை தடுக்கும் வகையில் தான் 3 ஏரிகளில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. இதற்காக, அரசுக்கு நிதி கேட்டு அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நிதி கிடைத்த பிறகு அந்த இடத்தில்  சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது’’ என்றார்.

ஆக்கிரமிப்பு விவரம் தெரியாது
தமிழகத்தில் 10,218 ஏரிகள் ஆக்கிரமிப்பின் பிடியில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் எத்தனை ஏக்கர் பரப்பளவு ஆக்கிரமிப்பில் உள்ளது? என்ற விவரம் பொதுப்பணித்துறை தலைமைக்கு தெரியாது.  இதுதொடர்பாக  கணக்கெடுக்கும்  பணி மேற்கொண்டு வருகிறது. அந்த கணக்கெடுப்பிற்கு பிறகுதான், அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்கீடு செய்து,  ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படும் என கூறப்படுகிறது. இதை தொடர்ந்து அந்த இடத்தில் ஏரிகளை சுற்றி  சுற்றுச்சுவர் அல்லது வேலி அமைக்கப்படுகிறது.

Tags : lakes ,Ambattur ,
× RELATED சென்னையின் முக்கிய ஏரிகளின் நீர் நிலவரம்!