×

வியாசர்பாடி, புளியந்தோப்பு, பல்லாவரம், அண்ணாநகரில் 1241 கிலோ போதை பொருட்கள் பறிமுதல்: தம்பதி உள்பட 7 பேர் கைது

பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி, புளியந்தோப்பு, பல்லாவரம் மற்றும் அண்ணாநகரில் 1241 கிலோ போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.  வியாசர்பாடி முல்லை நகர், எம்கேபி நகரில் நேற்று முன்தினம் மாலை எம்கேபி நகர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக மொபட் வேகமாக வந்தது. அதில் ஒரு கைப்பையுடன் வந்த வாலிபரை பிடித்து  சோதனை செய்தனர். அதில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் கொருக்குப்பேட்டை, அம்பேத்கர் நகர் 3வது தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியம் (29) என்பதும், வியாசர்பாடி, சஞ்சய் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பதுக்கி வைத்து  கடைகளில் விற்பனை செய்து வருவது தெரியவந்தது.

அந்த வீட்டை சோதனை செய்ததில் அங்கு மூட்டைகளில் பதுக்கியிருந்த 821 கிலோ குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், குட்கா கடத்தலுக்கு பயன்படுத்திய மொபட் மற்றும் 62,450 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.  இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு பாலசுப்பிரமணியத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். புளியந்தோப்பு:  சென்னை  புளியந்தோப்பு, கன்னிகாபுரம், பட்டாளம் மார்க்கெட், புளியந்தோப்பு  நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு போதை பொருட்கள் விற்பனை  செய்யப்படுவதாக நேற்று முன்தினம் புளியந்தோப்பு காவல் நிலைய  இன்ஸ்பெக்டர்  கிருஷ்ணமூர்த்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அந்த  பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் தீவிர  ரோந்து பணியில் ஈடுபட்டனர். வஉசி நகர் 8வது தெருவில் போலீசார் சென்றபோது,  அங்கு குட்கா விற்பனையில் ஈடுபட்ட பாஸ்கர்  (53) என்பவரை மடக்கி பிடித்தனர். இதேபோல்  குட்கா விற்பனை செய்த ஜெஜெ நகர் 7வது தெருவை சேர்ந்த பரத் (எ) பரத்குமார்  (38), அவரது மனைவி லீலாவதி (29) ஆகிய 2 பேரை பிடித்தனர்.இவர்களிடம்  இருந்து ஒரு மிக்சி, எடை மெஷின், 20 கிலோ மூலப்பொருட்கள்  மற்றும்  பிளாஸ்டிக் கவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு 1.50 லட்சம்  என கூறப்படுகிறது. இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார்  வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் கைது செய்தனர். பின்னர் பரத், பாஸ்கர்  ஆகிய இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். லீலாவதியை  சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

பல்லாவரம்: பம்மல் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெட்டிக்கடைகளில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சங்கர் நகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், விரைந்து சென்ற போலீசார், குட்கா  போதை பொருட்களை விற்பனை செய்ததாக குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (35) என்பவரை கைது செய்தனர். விசாரணையில் ராஜேஷ், பம்மல் பகுதியை சேர்ந்த பூவலிங்கம் (52) என்பவரிடம் இருந்து மொத்தமாக குட்கா வாங்கியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பம்மல், சூரியம்மன் கோயில் தெருவில் உள்ள பூவலிங்கத்தின் வீட்டை போலீசார்  சோதனை செய்தனர். அப்போது, விற்பனைக்காக மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 400 கிலோ எடையுள்ள குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக ராஜேஷ் மற்றும் பூவலிங்கம் ஆகிய இருவரையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணாநகர்: வில்லிவாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் தனசேகர் (26). நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்தபோது வில்லிவாக்கம் உதவி கமிஷனர் அகஸ்டின் பால்சுதாகர் தலைமையில் போலீசார் தனசேகரை கைது  செய்தனர். அவரிடம் இருந்து 250 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

கஞ்சா விற்பனை அமோகம்
புழல் பகுதி பொதுமக்கள் கூறுகையில், ‘‘புழல், கதிர்வேடு, என்.எஸ்.கே தெரு, அண்ணா நினைவு நகர் மின்சார வாரிய அலுவலகம், சைக்கிள் ஷாப், எம்ஜிஆர் நகர், அறிஞர் அண்ணா நகர், செங்குன்றம், நாராவாரி குப்பம், புழல் ஏரி கரை, ஆலமர  பகுதி, நல்லூர், ஆட்டந்தாங்கல், பெருமாள் அடி பாதம், அம்பேத்கர் நகர், நாகாத்தம்மன் நகர், எடப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா பொட்டலம் அதிகளவில்  விற்கப்படுகின்றன. இதனால் அப்பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வாலிபர்கள் கஞ்சா போதைக்கு அடிமையாவதால் பாலியல் தொல்லை  அதிகரித்து வருகிறது. மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகளில் அதிகம் ஈடுபடுகின்றனர். எனவே  கஞ்சா விற்பனை செய்பவர்களை புழல், செங்குன்றம், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களின் போலீசார் கைது செய்ய வேண்டும்’’ என்றனர்.

Tags : Anna Nagar ,Pallavaram ,
× RELATED ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல்...