×

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலம் மீட்பு போராட்டம் அறிவிப்பு பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு வெளியே சென்ற ஆர்டிஓ

பெரம்பலூர், செப். 26: சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்காததால் நிலங்களை மீட்கும் போராட்டம் அறிவித்ததால் அமைதி பேச்சுவார்த்தைக்கு அழைத்து விட்டு கூட்டம் தொடங்கும் நேரத்தில் ஆர்டிஓ வெளியே சென்றார். இதனால் இரண்டரை மணி நேரம் கூட்டம் நடத்த வராததால் ஆத்திரமடைந்த விவசாயிகள், ஆர்டிஓவை கண்டித்து கோஷமிட்டவாறு கூட்டத்தை புறக்கணித்து விட்டு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.பெரம்பலூர் சர்க்கரை ஆலை அருகில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பதற்காக விவசாயிகளிடமிருந்து ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜிவிகே நிறுவனம் மற்றும் இந்திய அரசின் பெருவணிகத்துறை (டிட்கோ) இணைந்து 2007ம் ஆண்டில் 3000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தி உள்ளனர். ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கபடாததால் கையகப்படுத்தப்பட்ட விளை நிலங்களை அந்தந்த விவசாயிகளிடமே மீண்டும் ஒப்படைக்கக்கோரி கடந்த 23ம் தேதி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
அந்த மனுவில் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு கையகப்படுத்தப்பட்ட விளைநிலங்களை அந்தந்த விவசாயிகளிடம் ஒப்படைக்ககோரி 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை திருமாந்துறை சுற்றுவட்டார கிராமங்களில் ஆட்டோ பிரசாரம் மற்றும் 30ம் தேதி நிலமீட்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர், கலெக்டர் சாந்தாவிடம் தெரிவித்திருந்தனர்.

இதைதொடர்ந்து பெரம்பலூர் கலெக்டர் சாந்தா உத்தரவின்பேரில் நேற்று 25ம் தேதி மாலை 3 மணிக்கு ஆர்டிஓ சுப்பையா தலைமையில் நிலங்களை கையகப்படுத்திய ஜிவிகே நிறுவனத்தினர் மற்றும் போராட்டம் அறிவித்துள்ள விவசாயிகள் தரப்பினர் என இருதரப்பினரையும் அழைத்து ஆர்டிஓ அலுவலக கூட்டமன்றத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த இருதரப்புக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதன்படி நேற்று மாலை 3 மணிக்கு பெரம்பலூர் ஆர்டிஓ அலுவலகத்துக்கு சம்பந்தப்பட்ட ஜிவிகே நிறுவனத்தை சேர்ந்த மேலாளரான திருச்சியை சேர்ந்த சுரேந்திரநாத், பெரம்பலூரை சேர்ந்த கணக்காளர் செந்தில் உள்ளிட்ட 3 பேர் வருகை தந்திருந்தனர். அதேபோல் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமையில் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ், மாதர் சங்க மாவட்ட துணைத்தலைவர் கலையரசி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பெரம்பலூர், ஆலத்தூர் வட்ட செயலாளர் ராஜாங்கம், நிலம் கொடுத்தோர் சங்கம் சார்பில் பென்னக்கோணத்தை சேர்ந்த ராமசாமி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த வேப்பூர் முருகேசன், சீனிவாசன், கிருஷ்ணசாமி உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

இருதரப்பை சேர்ந்தவர்களும் மதியம் 2.45 மணிக்கெல்லாம் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த நிலையில் கூட்டம் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்த 3 மணிக்கு ஆர்டிஓ சுப்பையா, குன்னம் தாசில்தார் ஆகியோர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அவரவர் ஜீப்புகளில் வெளியே புறப்பட்டு சென்றனர். இதையறிந்த விவசாயிகள் சங்கத்தினர், வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளரிடம் சென்று நாங்கள் அமைதி பேச்சுவார்த்தைக்காக வந்து காத்திருக்கும் நேரத்தில் ஆர்டிஓ எங்கு செல்கிறார், எப்போது திரும்ப வருவார் என்று கேட்டனர். அதற்கு வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர், விரைந்து வந்து விடுவார், கூட்டரங்கில் காத்திருங்கள் என்றார். இதைதொடர்ந்து 2 மணி நேரம் என காத்திருந்த விவசாயிகள் மாலை 5.30 மணிக்கு பிறகு, பொறுமையிழந்து கூட்டரங்கை விட்டு வெளியேறினர்.அரசு அலுவல் காரணமாக தான் சென்றுள்ளேன், இவ்வளவு மணி நேரத்தில் திரும்ப வந்து விடுவேன் என்பதை விவசாயிகள் சங்கத்தினரிடம் வருவாய் கோட்டாட்சியர் சுப்பையா உறுதிபட தெரிவிக்காததால் இரண்டரை மணி நேரம் காத்திருந்த விவசாயிகள் சங்கத்தினர் கூட்ட அரங்கிலிருந்து வெளியேறி வருவாய் கோட்டாட்சியரை கண்டித்து கோஷமிட்டவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் நேற்று மாலை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பாக காணப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்லதுரை தெரிவித்ததாவது: இதற்கு முன்பு வரை ஜிவிகே குழுமம் தான் நிலத்தை கையகப்படுத்தி கொண்டு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தாமல் நிலம் கொடுத்த விவசாயிகளை ஏமாற்றி வருகிறது என நினைத்திருந்தோம். இப்போது வருவாய்த்துறையும் அதற்கு உடந்தையாக இருப்பதுபோல் தெரிகிறது. கண்துடைப்புக்காக அறிவிப்பு செய்து விவசாயிகள் சங்கத்தினரை அவமானப்படுத்துகின்றனர். வருவாய் கோட்டாட்சியரின் இந்த செயலால் சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கான நிலம் மீட்பு போராட்டம் மேலும் மேலும் வெடித்து தீவிர மடையும் என்றார்.

Tags : RTO ,announcement ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு