×

ஆற்றுவாரி கரையில் உடைப்பு ஏற்பட்டு தோகைமலை ஆதிதிராவிடர் காலனி குடியிருப்பில் தேங்கி நிற்கும் மழைநீர் தொற்று நோய் பரவும் அபாயம்

தோகைமலை, செப். 26: தோகைமலை திருமாணிக்கம்பட்டி ரோட்டில் உள்ள ஆதிதிராவிடர்காலனி பகுதியில் ஆற்றுவாரியின் கரையில் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகளில் மழைநீர்தேங்கி நிற்பதால் தொற்று நோய் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.கரூர்மாவட்டம் தோகைமலையில் திருமாணிக்கம்பட்டி ரோட்டில் ஆதிதிராவிடர்காலனி பகுதியில் சுமார்100 குடியிருப்புகள் உள்ளது. இதில் வீரமலை வனப்பகுதியில் இருந்து திருப்பாத்தி, தோகைமலை ஒன்றிய அலுவலகம் மற்றும் தோகைமலை திதிராவிடர்காலனியின் குடியிருப்புகளுக்கு மேற்கு பகுதி வழியாக தோகைமலையில் உள்ள பெரிய குளத்திற்கு ஆற்று வாரி செல்கிறது. மழைக்காலங்களில் மேற்படி பகுதிகளின் வழியாக ஆற்றுவாரியில் மழைநீர்செல்கிறது. கடந்த சில ஆண்டுகளாக மழையின்மையால் ஆற்றுவாரி தூர்வாரப்படாமல் முட்கள் படர்ந்து காட்சி அளித்து வந்தது.

மேலும் இந்த ஆற்றுவாரியின் இருபுறங்களிலும் கரைகளை சேதப்படுத்தி ஆக்கிரமிப்பு செய்தும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தோகைமலை பகுதிகளில் மழை பெய்து வருகிறது.இதேபோல் நேற்று முன்தினம் பெய்த மழையில் வீரமலை வனப்பகுதியில் இருந்து ஆற்றுவாரியில் மழைநீர்வந்தது. இதனால் திருமாணிக்கப்பட்டி ரோட்டில் உள்ள பாலம் அருகே ஆற்றுவாரியின் கரை உடைப்பு ஏற்பட்டு ஆதிதிராவிடர்காலனி குடியிருப்புகளை சுற்றி மழைநீர் சூழ்ந்து நின்றது. கழிவு நீரும் சேர்ந்து வந்ததால் துர்நாற்றம் ஏற்பட்டதாக இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே சேதமடைந்து உடைப்பு ஏற்பட்ட கரையை சரிசெய்வதோடு, ஆற்றுவாரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி அகலப்படுத்தி கரைகளை உயர்த்த வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags :
× RELATED விளை பொருட்கள் விலை குறைப்பதை...