×

கலசபாக்கம் அருகே வளர் இளம் பருவத்தினரின் மனநிலை குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு

கலசபாக்கம், செப்.26: கலசபாக்கம் அருகே வளர் இளம்பருவத்தினரின் மனநிலை குறித்து டெல்லி, மும்பை மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.வளர் இளம்பருவத்தினரின் மனநிலை குறித்து அறிய மருத்துவ ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்ேவறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர்களின் மன நிலையை அறிந்து கொள்ள பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் சுகாதார துறை மூலம் நடைபெற்று வருகிறது.இதேபோல், வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம். பாலியல் தொந்தரவுகள், போதை வஸ்துகளை பயன்படுத்துதல் தடுத்தல், மனநலம் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இதில் 10 வயது முதல் 19 வயது வரை உள்ள வளர் இளம்பெண்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கலசபாக்கம் அடுத்த கடலாடி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் புதுடெல்லியை சேர்ந்த மருத்துவ இயக்குனர் பிரவாக், மும்பையை சேர்ந்த ஆராய்ச்சி உதவியாளர்கள் நஞ்சப்பன், தம்பித்துரை தங்கவேல் ஆகியோர் மருத்துவர்களிடம் வளர் இளம்பெண்களுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்வுகள் குறித்து கேட்டறிந்தனர்.மேலும், குழந்தை திருமணம் தடுத்தல், பெண் சிசு கொலை உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தனர். வளர் இளம்பெண்களின் மனநிலைக்கு ஏற்றவாறு உளவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.

Tags : Kalasakkam ,
× RELATED கலசபாக்கம் பகுதிகளில் சாகுபடி செய்த 50...