×

முறைகேடாக பயன்படுத்திய சிலிண்டர்கள் பறிமுதல் அதிகாரிகளை சிறைபிடித்த கடை உரிமையாளர்கள் ஜீப்பை தீவைத்து கொளுத்துவதாக மிரட்டியதால் பரபரப்பு

ஆற்காடு, செப்.26: கலவை அருகே கடைகளில் முறைகேடாக பயன்படுத்திய வீட்டு உபயோக சிலிண்டர்களை பறிமுதல் செய்த அதிகாரிகளை கடை உரிமையாளர்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் மாவட்டம் கலவை அருகே உள்ள மாம்பாக்கத்தில் டீக்கடை, ஓட்டல்களில் வீட்டு உபயோக சிலிண்டர்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் வட்ட வழங்கல் அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் வருவாய் ஆய்வாளர் இளையராஜா, விஏஓ சீனிவாசன் மற்றும் வருவாய் துறையினர் நேற்று வாழைப்பந்தல், மாம்பாக்கம் உட்பட பல்வேறு பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனையிட்டனர்.

அப்போது மாம்பாக்கத்தில் டீக்கடை, ஓட்டல்களில் முறைகேடாக பயன்படுத்திய 10க்கும் மேற்பட்ட வீட்டு உபயோக காஸ் சிலிண்டர்களை பறிமுதல் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்கள் அதிகாரிகள் வந்த ஜீப்பை மாம்பாக்கம் கூட்ரோடு அருகே சிறை பிடித்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது சிலர் சிலிண்டர்களை ஒப்படைக்காவிட்டால் அதிகாரிகள் வந்த ஜீப்பை கொளுத்தி விடுவோம் என மிரட்டியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாழப்பந்தல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அதிகாரிகளின் வாகனத்தை விடுவித்து, அங்கிருந்த கடை உரிமையாளர்கள், பொதுமக்களை அதிரடியாக அப்புறப்படுத்தினர்.

Tags : Shoppers ,
× RELATED உ.பி.யில் வாடிக்கையாளர்களை அழைப்பதில்...