×

குடியிருப்பு கட்டிட அனுமதி வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகளின் அதிகார வரம்பு அதிகரிக்கிறது நகர் ஊரமைப்பு இயக்குனரகம் உத்தரவு

வேலூர், செப்.26:குடியிருப்பு கட்டிடங்களுக்கான அனுமதி வழங்குவதில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான அதிகார வரம்பை நகர் ஊரமைப்பு இயக்குனரகம் உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.சென்னையை தவிர்த்து தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் இதுவரை 4 ஆயிரம் சதுரஅடி வரையில் தரை பரப்பு வரை, 4 குடியிருப்புகள் வரை கொண்ட தரை தளம் மற்றும் முதல் தளம் அல்லது வாகன நிறுத்துமிடம் மற்றும் இரண்டு தளங்களுக்கு கட்டிட தொழில்நுட்ப அனுமதி வழங்கப்பட்டு வந்தது. அதேபோல் 2 ஆயிரம் சதுர அடி வரையுள்ள வணிக நோக்கம் கொண்ட கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதி வழங்கப்பட்டு வந்தது.இந்த அளவுக்கு மேல் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நோக்கம் கொண்ட கட்டிடங்களுக்கு உள்ளூர் திட்ட குழுமங்களிடம் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள், 2019 வெளியிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதை தொடர்ந்தும், உள்ளாட்சிகளுக்கு கூடுதல் அதிகார பகிர்வு வழங்க கோரிக்கைகள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து கட்டிட அனுமதி வழங்கும் அதிகாரத்தில் பகுதி மாற்றம் செய்து நகர் ஊரமைப்பு இயக்குனர் சந்திரசேகர் சாகமூரி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, 7 ஆயிரம் சதுர அடி தரை பரப்பு வரை, 8 குடியிருப்புகள் வரை கொண்ட, 12 மீட்டர் உயரத்துக்கு மிகாத தரைதளம் மற்றும் இரண்டு தளங்கள் அல்லது வாகன நிறுத்தும் தளம் மற்றும் மூன்று தளங்கள் வரையுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளே அனுமதி வழங்கலாம். வணிக நோக்க கட்டிடங்களுக்கான வரையறையில் பழைய நிலையே தொடரும் என்று அந்த உத்தரவில்கூறப்பட்டுள்ளது.இதுதொடர்பான சுற்றறிக்கை அனைத்து கலெக்டர்கள், அனைத்து உறுப்பினர் செயலர்கள், உள்ளூர் திட்ட குழுமங்கள், புறநகர் வளர்ச்சி குழுமங்கள், சென்னையை தவிர்த்த மாநகராட்சி, நகராட்சி கமிஷனர்கள், மண்டல துணை இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட...