×

தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கான மகப்பேறு உதவித்தொகை வழங்காமல் ஓராண்டாக நிறுத்தம்

வேலூர், செப்.26:தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மகப்பேறு உதவித்தொகை வழங்காமல் கடந்த ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழக அரசு சுகாதாரத்துறையில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் ஏழை கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் விதமாக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு உதவித்திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக குழந்தை இறப்பு விகிதம் மற்றும் தாய்மார்கள் இறப்பு விகிதம் ஆகியவற்றை குறைக்கும் வகையில் தொடங்கப்பட்டது.கர்ப்பமுற்று 12 வாரத்திற்குள் கிராம மற்றும் நகர செவிலியர்களிடம் ஆதார் அட்டை, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை தெரிவித்து மகப்பேறு நிதியுதவித்தொகை பெறும் திட்டத்தில் பெயரை பதிவு செய்து பிக்மி எண் பெற்றவுடன் ₹4 ஆயிரம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பகிறது.அதைத்தொடர்ந்து, 4வது மாதம் நிறைவடைவதற்குள் 2வது தவணையாக ₹4 ஆயிரம் வழங்கப்படுகிறது. அரசு மருத்துவமனையில் பிரசவம் முடிந்தவுடன் 3வது தவணையாக ₹4 ஆயிரம், பேறு காலம் முடிந்து குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் காலக்கட்டத்தில் 4வது தவணையாக ₹4 ஆயிரம், குழந்தைக்கு 9 மாதம் முடிந்தவுடன் ₹2 ஆயிரம் என மொத்தம் ₹18 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இதேபோல் கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் திறனை மேம்படுத்தும் விதமாக இரும்புச்சத்து டானிக், உலர் பேரீச்சை, புரதச்சத்து பிஸ்கட், நெய், அல்பெண்டாசோல் மாத்திரை, கதர் துண்டு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படுகிறது. கர்ப்பிணிகள் தங்களது குழந்தைகளை உடல் ஆரோக்கியத்துடன் பெற்று வளர்க்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. நடுத்தர மற்றும் வறுமை நிலையில் உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ள வகையில் அமைந்திருந்தது.இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கர்ப்பிணிகளுக்கு வழங்க வேண்டிய மகப்பேறு உதவித்தொகை முறையாக வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கர்ப்பிணிப்பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்த ₹18 ஆயிரம் பேறுகால உதவித்தொகை கடந்த 13 மாதங்களுக்கும் மேலாக வழங்கப்படவில்லை.இதனால் மகப்பேறு காலத்தில் தாய், சேய் நல பாதுகாப்பில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குழந்தைக்கான பராமரிப்புக்கு கடன் வாங்கி செலவு செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. ஊட்டசத்து பெட்டகம் மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில், இதுநாள் வரை உதவித்தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவில்லை.

இதுதொடர்பாக அரசு சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்ததில், ‘மத்திய அரசு வழங்க வேண்டிய முதல் தவணைக்கான தொகை இன்னும் வழங்கப்படவில்லை. மத்திய அரசு முதல் தவணையான ₹2 ஆயிரம் செலுத்திய பிறகு அடுத்தடுத்து மீதமுள்ள ₹16 ஆயிரம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கின்றனர்.ஆனால், மகப்பேறு உதவித்தொகை கோரிய கர்ப்பிணிகளின் விண்ணப்பங்களை தமிழக அரசு முறையாக பதிவு செய்ததா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாக தெரிவிக்கின்றனர். எனவே, ஓராண்டுக்கு மேலாகியும் வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு உதவித்தொகையை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Tamilnadu ,stop ,
× RELATED கொரோனா ஊரடங்கால் கோடிகளை கொட்டித்தரும் மொய் விருந்து நிறுத்தம்