×

பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தட்டைப்பயறு விலை உயர்வு

பாவூர்சத்திரம், செப். 26: பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் வரத்து குறைவால் தட்டைப்பயறு விலை உயர்ந்தது.நெல்லை மாவட்டம் கீழப்பாவூர், அடைக்கலப்பட்டினம், கரும்பனூர், ஆண்டிப்பட்டி, சென்னெல்தாபுதுக்குளம், பெத்தநாடார்பட்டி, மகிழ், கரிசல்பட்டி மற்றும் கீழப்பாவூர் ஒன்றிய தென்பகுதிகளில் ஏராளமான தோட்டங்களில் காராமணி எனப்படும் தட்டைப்பயறு பயிரிடப்பட்டு உள்ளது. இப்பகுதியில் விளையும் தட்டைப்பயறை விற்பனைக்காக பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். இங்கு விற்கப்படும் தட்டைப்பயறு, கேரளா மாநிலம் கொல்லம், புனலூர், கொட்டாரக்கரை, திருச்சூர், கொச்சி, கோட்டயம், ஆலப்புழா போன்ற பல பகுதிகளை சேர்ந்த காய்கறி மொத்த வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர். கடந்த வாரம் 3 முதல் 8 டன் வரை பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு விற்பனைக்கு வந்தது. வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.5 முதல் 15 வரை விற்பனையானது.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பாவூர்சத்திரம் மார்க்கெட்டிற்கு ஒரு டன்னுக்கும் குறைவாக தட்டைப்பயறு விற்பனைக்கு வந்தது. வரத்து குறைவாலும் கேரள வியாபாரிகள் தட்டைப்பயறை தங்கள் தேவைக்கேற்ப கொள்முதல் செய்ததால் விற்பனையில் ஏற்றம் காணப்பட்டு  கிலோ ரூ.25 முதல் 35 வரை விற்பனையானது. இதனால் தட்டைப்பயறு விவசாயிகள்
மகிழ்ச்சியடைந்தனர்.

Tags :
× RELATED மயங்கி விழுந்த கடை உரிமையாளரிடம் நகை பறிப்பு