கழுகுமலை, செப்.26: குடிநீர் சீராக வழங்காததை கண்டித்து கழுகுமலை பேரூராட்சியை அனைத்துக் கட்சியினரும், பொதுமக்களும் 200க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். கோவில்பட்டி குடிநீர் வடிகால் வாரியத்தையும் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
கழுகுமலை பேருராட்சியில் உள்ள 15 வார்டுகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை சீவலப்பேரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரி ரூ.60லிருந்து ரூ.120ஆக உயர்த்தப்பட்டும் சீராக வழங்கப்படாமல் மாதம் ஒரு முறையேதான் தண்ணீர் வருகிறது. இந்நிலையில் நேற்று திமுக, இந்திய கம்யூ., மதிமுக, மார்க்சிஸ்ட், புதிய தமிழகம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், தமமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், பொது மக்களும் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு சுமார் 3மணி நேரத்திற்கு மேலாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் செயல் அலுவலர் உஷா, கழுகுமலை இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உயரதிகாரிகள் வந்து பேச்சு வார்த்தை நடத்தினால்தான் கலைந்து செல்வோம் என்று கூறியதால் கோவில்பட்டி குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மெர்சி வந்து பேசினார். இதில் கழுகுமலை பேரூராட்சிக்கு இதுவரை 7 லட்சம் லிட்டர் தண்ணீர் தந்து வருகிறோம். இனி, 8லிருந்து 9 லட்சம் லிட்டர் தண்ணீர் வழங்கப்படும் என்பதையும் மின்தடை மற்றும் பழுது ஏற்படும் காலங்களில் குடிநீர் குறைவாக வழங்கப்பட்டால் மறுதினம் அதற்கும் சேர்த்து குடிநீர் வழங்கப்படும் என எழுத்துப் பூர்வமாக கோவில்பட்டி குடிநீர் வாரிய உதவி பொறியாளர் மெர்சி எழுதி கொடுத்த பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி பஞ்சாயத்தில் லாயல்மில் காலனி, மறவர் காலனி, தாமஸ்நகர், கூசாலிபட்டி, பூசாரிபட்டி, வடக்கு இலுப்பையூரணி உள்ளிட்ட 12 குக்கிராமங்களில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பஞ்சாயத்து பகுதி மக்களுக்கு சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் வாரம் இருமுறை எனும் கணக்கில் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 6 மாதமாக குடிநீர் வழங்கப்படாததால், மக்கள் அவதிப்படுகின்றனர். ஒரு குடம் குடிநீர் ரூ.10 வரை விலை கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. நேற்று சீராக குடிநீர் வழங்காததை கண்டித்து இலுப்பையூரணி பஞ்சாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் வெற்றிசிகாமணி தலைமையில் கோவில்பட்டியில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய (கிராம குடிநீர் திட்டம்) அலுவலகத்தை முற்றுகையிட்டனர். குடிநீர் வழங்காததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் சுப்பையா, சிவராம், சுப்பிரமணியன், காசிநாதன், பூல்பாண்டியன், சோலைச்சாமி, பொன்னுச்சாமி, முருகன், சண்முகசுந்தரவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இதையடுத்து குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர் செந்தூர்பாண்டி, உதவி பொறியாளர் மெர்சி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது நாளை (27ம் தேதி) முதல் சீவலப்பேரி குடிநீர் வாரந்தோறும் புதன், ஞாயிறுக்கிழமைகளில் குடிநீர் வழங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.