×

150 ரயில்களை தனியார் மயமாக்க வாரியம் முடிவு போராட்டங்களை தீவிரப்படுத்த டிஆர்இயூ அவசர செயற்குழு

மன்னார்குடி, செப்.26: இந்தியாவில் முதல் கட்டமாக 150 ரயில்களை தனியார் மயமாக்க ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது தொடர்பான போராட்டங்களை தீவிரப்படுத்த வருகிற 29ம் தேதி சென்னையில் டிஆர்இயூ தொழிற்சங்கம் தனது அவசர செயற்குழுவை கூட்டுகிறது.இதுக்குறித்து, தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் மாநில துணை பொதுச்செயலாளர் மனோகரன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நூறு நாட்கள் செயல் திட்டத்தில் ரயில்வே வாரியம் முதலில் இரண்டு தனியார் ரயில்கள் அறிவிப்பை வெளியிட்டது. நாடு தழுவிய எதிர்ப்புகளால் அதை இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகம் வசம் கைமாற்றிவிட்டது. இந்நிறுவனம் டெல்லி-லக்னோ, மும்பை-அகமதாபாத் இடையே ரயில்களை இயக்க தயாராகி வருகிறது.இந்த சூழலில் ரயில்வே வாரியத்தலைவர் வினோத்குமார் யாதவ், 150 தனியார் ரயில்கள் இயக்க இருப்பதாகவும், அவைகள் டெல்லி-மும்பை, டெல்லி-அவுரா பாதைகளில் இயக்கப்படும் என்றும் நாளிதழுக்கு பேட்டி அளித்திருந்தார். இந்த பாதைகளில் மணிக்கு 160 கி.மீ வேக ரயில்கள் இயக்க கட்டமைப்புகள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடந்த 23ம்தேதி அனைத்து மண்டல இயக்க மேலாளர்களுக்கும் தனியார் ரயில்கள் இயக்க ஏதுவான பாதைகள் மற்றும் ரயில்கள் கண்டறிய வாரியம் உத்தரவிட்டது. இது தொடர்பாக விரிவாக விவாதித்து பாதைகள் மற்றும் ரயில்களை இறுதி செய்ய நாளை (27ம்தேதி) வாரியக் கூட்டம் புதுடெல்லியில் நடைபெற இருக்கிறது.ராஜதானி, சதாப்தி, துரந்தோ போன்ற பிரீமியம் ரயில்களும், டபுள் டெக்கர், தேஜாஸ் இன்டர்சிட்டி, தொலைதூர விரைவு ரயில்கள் பலவும் லாபத்தில் இயங்கி வருகின்றன. லாபகரமான இந்த ரயில்கள் தனியார் வசம் ஒப்படைத்து விட்டால், நஷ்டத்தில் இயங்கும் சமூக தேவைகளுக்கான குறைந்த கட்டண பாசஞ்சர் ரயில்கள் தொடர்ந்து இயக்க வாய்ப்பு இல்லை.மேலும் தனியார் ரயில்களுக்கு ரயில்வே பயணச்சீட்டு விற்பனை மற்றும் பயணச் சீட்டு பரிசோதனை கிடையாது. இதனால் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஊழியர்கள் அடுத்த 3 ஆண்டுகளில் ரயில்வேயில் வேலை இழப்பார்கள். ரயில்வேத்துறை சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்க திட்டமிடுகிறது.ரயில்வே துறையில் மிகப்பெரும் தனியார்மய நடவடிக்கை எதிர்த்து போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து விவாதித்து முடிவெடுக்க தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியனின் அவசர செயற்குழு கூட்டம் வருகிற 29ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் கூடுகிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : protests ,TREU Emergency Working Group ,
× RELATED அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன...