×

வலங்கைமான் பேரூராட்சி 6வது வார்டில் அடிப்படை வசதியை வலியுறுத்தி நடக்க இருந்த போராட்டம் வாபஸ்

வலங்கைமான், செப்.26: வலங்கைமான் பேரூராட்சி ஆறாவது வார்டில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை நடைபெற இருந்த சாலைமறியல் போராட்டம் தாசில்தார் அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்காலிகமாக வாபஸ்பெறப்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி ஆறாவது வார்டில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு மழைநீர் வெளியேறும் விதமாக வடிகால் வசதி செய்து தரவேண்டும். பேருந்து நிறுத்தம், அங்கன்வாடி கட்டிடம், புதிதாக தொகுப்பு வீடுகள் ஆகியவை கட்டித்தர வேண்டும், மயானத்ததிற்கு சுற்று சுவர் மற்றும், ஈமக்கிரியை மண்டபம் அமைத்து தரவேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை (27ம் தேதி) சாலை மறியல் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் வலங்கைமான் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் இஞ்ஞாசிராஜ் தலைமையில் சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில நிர்வாககுழு செவ்வராஜ், விவசாய சங்க மாவட்ட தலைவர் ரெங்கராஜன், ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் (பொ) உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். மேலும் காவல்துறை, ஊராகவளர்ச்சித்துறை, பொதுப்பணித்துறை மற்றும் பேரூராட்சி உள்ளிட்ட அணைத்து துறைகளை சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் பொதுமக்களின் கோரிக்கை குறித்து தொடர்புடைய துறைகள் சார்பில் விரைவில் தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்ததை அடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை வலங்கைமானில் நடைபெறவிருந்த சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.


Tags : Valangaiman Peraruzi ,6th Ward ,
× RELATED உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல் நிகழ்ச்சி