×

நீர் நிலைகளில் மூழ்கி இறப்பு சம்பவங்களை தடுக்க கிராமசபை கூட்டங்கள் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

வலங்கைமான், செப்.26: குளம், ஆறு உள்ளிட்ட நீர் நிலைகளில் மாணவர்கள் இறக்கும் சம்பவங்களை தடுக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து ஆறுகளில் அதிக அளவு தண்ணீர் செல்கிறது. மேலும் குளங்கள், ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் சில நிரம்பியுள்ளது. இந்நிலையில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை நீர்நிலைகளில் குளிப்பதற்கு மற்றும் இதர பயன்பாடிற்கு இறங்கும்போது பரிதாபமாக இறந்து விடுகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளது.இந்நிலையில் திருவாரூர், அரியலூர், தஞ்சை என அடுத்தடுத்து பள்ளி மாணவ, மாணவிகள் ஆறுகள், குளங்களில் குளிக்கச் செல்லும்போது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறக்கும் ேசாகமான சம்பவங்கள் நடக்கிறது. பல பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண்களை குறிவைத்தே வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. மாணவர்களுக்கு நீதிபோதனை வழங்கும் வகுப்புகள் நடத்தப்படுவதில்லை.

சில பள்ளிகளில் மாணவர்களை விளையாடவே அனுமதிப்பதில்லை. சில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் போதிய விளையாட்டு மைதானமே கிடையாது. இது போன்ற சூழ்நிலையில் மாணவர்களுக்கு நீச்சல் தெரியாமலும், அது குறித்த விழிப்புணர்வும் இல்லாத நிலையில் ஆறு, குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் குளிக்க பெற்றோர்கள் அனுமதிப்பது தவறாகும்.நீச்சல் தெரிந்த பெரியவர்கள் கூட ஆறுகளில் தவறி விழும்போது ஆறுகளில் பல அடி ஆழத்திற்கு மணல் அள்ளப்பட்ட பகுதிகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றனர்.இந்நிலையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சிறப்பு கிராமசபை கூட்டங்களை நடத்தி அதில் சமூக ஆர்வலர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும், துண்டு பிரசுரங்கள் வழங்கவேண்டும், காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறந்தவுடன் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Gram sabha meetings ,deaths ,
× RELATED 10 ஆண்டுகளில் 4.25 லட்சம் பேர் தற்கொலை:...