×

மயிலாடுதுறையில் தண்ணீர் நிரம்பாத குளங்களில் தன்னார்வ அமைப்பினர் ஆய்வு மழைபெய்தும், காவிரிநீர் பாய்ந்தும் பயனில்லை

மயிலாடுதுறை, செப்.26: நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பல்வேறு குளங்கள் வறண்டு கிடக்கின்றன. காவிரியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மேட்டூர் அணை நிரம்பியதால் கொள்ளிடத்தில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் கொள்ளிடம் வழியாக சென்று வங்கக்கடலில் கலக்கிறது. ஆனால் இப்பொழுதுதான் கிளை வாய்க்கால்களில் தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இதற்டையே மயிலாடுதுறை நகரில் உள்ள பல்வேறு குளங்களில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதைக் கண்ட உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கனகசுந்தரம், வர்த்தக சங்க பிரமுகர்கள் ரவிச்சந்திரன், செந்தில்பைப்மதியழகன், பாண்டுரங்கன், சிவலிங்கம், ஜெயக்குமார், மயிலாடுதுறை மாவட்டத்திற்கான போராட்டக்குழு வழக்கறிஞர் ராமசேயோன், ஓய்வுபெற்ற தாசில்தார் ராமகிருஷ்ணன் மற்றும் பலர் நேற்று மதியம் ஒருங்கிணைந்து மயிலாடுதுறை வட்டாட்சியர் அலுவலகம் பின்புறத்தில் தண்ணீரின்றி கிடக்கும் மட்டகுளத்தை பார்வையிட்டனர். மேலும், டவுன்ஸ் டேஷன் சாலையில் 36 ஆண்டுகளாக காவிரி நீரை எட்டிப்பார்க்காத குளத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

நீதிமன்றம் முன் உள்ள குளத்தில் தூர்வாரியிருந்ததால் மழைநீர் தேங்கியுள்ளதை கண்டனர். அக்குளத்திற்கு தண்ணீர் வரும் வழியை சரிசெய்யவில்லை. பழங்காவிரியிலிருந்து பிரியும் பட்டமங்கல வாய்க்காலிலும் தண்ணீர் வரவில்லை, ஆக்கிரமிப்பில் இருந்தாலும் தண்ணீர் நிரம்பியுள்ள செம்பங்குளம், பூக்கடைத்தெருவில் உள்ள மாமரத்துமேடைக்குளம் போன்றவற்றை பார்வையிட்டனர். தற்பொழுது குளத்திற்கு தண்ணீர் செல்லும் பாதையை சரிசெய்யவேண்டும், பழங்காவிரி பல இடங்களில் தூர்வாராமல் செடிகொடிகள் அடர்ந்து தண்ணீர்செல்லும் வழியை அடைத்துள்ளது என்றும் பழங்காவிரியிலிருந்து பிரியும் பட்டமங்கல வாய்க்காலை உடனே தூர்வாரி இதுபோன்ற குளங்களுக்கு தண்ணீர் செல்லவழியை ஏற்படுத்த குளத்தை நிரப்ப வேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் உள்ள குளங்கள் குறித்து அவற்றின் நிலை குறித்தும் அவற்றை சரிசெய்வதற்காக மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரை சந்திப்பது என்றும் முடிவெடுக்கப்பட்டது.இந்த தருணத்தில் குளங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் மீட்க முடியாது என்றும், கனகசுந்தரம் என்ற பொதுநல வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் மயிலாடுதுறை நகராட்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தபோது அளித்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றவில்லை என்றும் கூறினார். விரைவில் இந்த அமைப்பை மேலும் பல நல்லகாரியங்களை நகர் முன்னேற்றத்திற்கு பாடுபடுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.


Tags : rainfall ,Mayiladuthurai ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...