×

பேச்சிப்பாறை அணை பொறியாளர் அலெக்ஸாண்டர் மிஞ்சின் நினைவுதினம் விவசாயிகள் அஞ்சலி

குலசேகரம்,செப்.26:       குமரி மாவட்டத்தின் உயிர் நாடியாக விளங்கும் பேச்சிப்பாறை அணை  கட்டும் பணி 1869 ல் துவங்கப்பட்டு 1906 வரை நடைபெற்றது.திருவாங்கூர்  மன்னர்  மூலம் திருநாள் மார்த்தாண்ட வர்மா ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட  இந்த அணையின் பொறியாளர்களாக பலர் பணிபுரிந்துள்ளனர்.இதில் இங்கிலாந்தை  சேர்ந்த பொறியாளர் ஹம்ரே அலெக்ஸாண்டர் மிஞ்சின் முக்கியமானவர் ஆவார். அணை  பணியில் தன்னை முழுமையாக அர்பணித்த இவரின் செயல்பாடுகள் மன்னரின் மனதை  கவர்ந்தது.பொதுமக்களிடம் நெருக்கமாக பழகிய இவர் மக்களின் மனதில் நீங்கா  இடம்பிடித்தார். இதனால் குலசேகரம், பேச்சிப்பாறை போன்ற இடங்களில் பல  இடங்களுக்கு அலெக்ஸாண்டர்புரம்,அலெக்ஸாண்டர் நகர் என மக்கள்  பெயர் சூட்டி  மகிழ்ந்தனர். 1913 ஆண்டு செப்டம்பர் 25ம்தேதி மலேரியா காய்ச்சல் காரணமாக  மறைந்த இவரின் உடல் மன்னர் உத்தரவின் பேரில் நாகர்கோவிலில் இருந்து  அலங்கரிக்கப்பட்ட வண்டியில் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அரசு மரியாதையுடன்  பேச்சிப்பாறை அணை அருகில் அடக்கம் செய்யப்பட்டது. இவரின் நினைவு நாள்,  பிறந்த நாட்களில் விவசாயிகள், அரசியல் கட்சியினர் திரண்டுவந்து புகழஞ்சலி  செலுத்துவது வழக்கம்.

நேற்று இவரின் 106 வது நினைவு தினத்தை முன்னிட்டு  பொதுப்பணிதுறையினர், மத்திய அரசின் தேன் ஈ வளர்ப்பாளர் ஆலோசனை கமிட்டி  உறுப்பினர் ஹென்றி தலைமையில்  விவசாயிகள்  மலரஞ்சலி செய்தனர். திருவட்டார்  மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் காஸ்ட்டன் கிளிட்டஸ் தலைமையில் காங்கிரஸ்  கட்சியினர் அஞ்சலி செய்தனர்.  நாம் தமிழர் கட்சி சார்பில் பேச்சிப்பாறை அணை  சந்திப்பிலிருந்து ஊர்வலமாக சென்று அவரின் நினைவிடத்தில் நீர் நிலைகளை  பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்து வீரவணக்கம் செய்தனர். இதற்கு நாம்  தமிழர் கட்சி குமரி மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை வகித்தார். பத்மநாபபுரம்  தொகுதி செயலாளர் அகமது கபிர், வழக்கறிஞர் பாசறை மண்டல இணை செயலாளர்  ஜாண்சிலின் சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் பாசறை மண்டல  செயலாளர் சுனிதா ஜோஸ், குமரி வடக்கு மாவட்ட தலைவர் நன்மாறன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Tags : Alexander Mingch ,Damchaparam Dam ,
× RELATED விஜய்வசந்த், பொன்.ராதாகிருஷ்ணன்,...