×

நவராத்திரி விழாவில் பங்கேற்க திருவனந்தபுரம் புறப்பட்டார் முன்னுதித்த நங்கை அம்மன்

சுசீந்திரம், செப்.26:  திருவனந்தபுரத்தில் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க நேற்று காலை சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் விக்ரகம் பவனியாக புறப்படும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது தமிழக, கேரள போலீசார் பேண்ட் வாத்தியம் முழங்க மரியாதை செலுத்தினர்.திருவனந்தபுரத்தில் வருடம்தோறும் 10 நாள் நடக்கும் நவராத்திரி விழாவில் பங்கேற்க சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் தேவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன், வேளிமலை குமார கோவில் முருகன் ஆகிய சுவாமி விக்ரகங்கள் பவனியாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் 9 நாட்கள் வைத்து பூஜைகள் செய்வார்கள். விழா முடிந்ததும் மீண்டும் அந்தந்த கோயில்களுக்கு சாமி சிலைகள் கொண்டு வரப்படும்.இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வரும் 29ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சுவாமி சிலைகள் குமரி மாவட்டம் பத்மநாபபுரத்தில் இருந்து இன்று (26ம் தேதி) பவனியாக கொண்டு செல்லப்படுகிறது.முன்னதாக நேற்று (25ம் தேதி) முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரத்துக்கு புறப்படும் நிகழ்ச்சி  சுசீந்திரத்தில் நடந்தது. அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கும், அம்மன் முன்புள்ள சக்கரத்திற்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து காலை 8 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் முன்னுதித்த நங்கை அம்மன் எழுந்தருளினார். தொடர்ந்து அம்மன் தாணுமாலயன் சுவாமி கோயிலின் 4 ரத வீதிகளையும் சுற்றி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்ேபாது பக்தர்கள் அம்மன் மீது பூக்களை தூவி வழிபட்டனர்.  இதனால் 4 ரத வீதிகளும் பூக்களால் நிரம்பி காணப்பட்டது.

தொடர்ந்து தமிழக, கேரள போலீசார் பேண்ட் வாத்தியம் முழங்க அம்மனுக்கு மரியாதை செலுத்தினர். பின்னர் காலை 10.30 மணியளவில் அம்மன் ஊர்வலம் பத்மநாபபுரத்திற்கு புறப்பட்டது. நிகழ்ச்சியில் குமரி மாவட்ட காவல் துறை எஸ்பி நாத், அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அனில்குமார், திருக்கோயில்கள் இணை ஆணையர் அன்புமணி, கோயில் கண்காணிப்பாளர் ஜீவானந்தம், மேலாளர் சண்முகம் பிள்ளை, வள்ளலார் பேரவையை சேர்ந்த பத்மேந்திரா மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு முன்னுதித்த நங்கை அம்மன், பத்மநாபபுரம் நீலகண்டசுவாமி கோயில் சென்றடைந்தது.இன்று காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனை உப்பரிகை மாளிகையின் மேல்மாடியில் உள்ள பூஜை அறையில் பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்ட வர்மாவின் உடைவாளை கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் எடுத்து குமரி மாவட்ட தேவசம்போர்டு அதிகாரியிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர் முன்னுதித்த நங்கை அம்மன், வேளிமலை முருகன் சாமி விக்ரகங்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும், ேதவாரக்கெட்டு சரஸ்வதி அம்மன் யானை மீதும் அமர வைத்து திருவனந்தபுரத்திற்கு  புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் அமைச்சர்கள், தமிழக, கேரள மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.இன்று இரவு சுவாமி விக்ரகங்கள் குழித்துறை மகாதேவர் கோயிலை சென்றடையும். நாளை காலை குழித்துறையில் இருந்து பவனி புறப்படும். இந்த பவனிக்கு தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரும் 28ம் தேதி இரவு 8 மணிக்கு ஊர்வலம் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலை அடைகிறது.

Tags : Nangai Amman ,festival ,Thiruvananthapuram ,Navratri ,
× RELATED மதுரை சித்திரைத் திருவிழா: போலீசாரின்...