×

சம்பளம் வழங்காமல் இழுத்தடிப்பு கல்லூரி ஆசிரியர்கள் முழக்க போராட்டம்

திருச்சி, செப்.25: அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியர் சங்கம் (ஆக்டா) சார்பில், மாபெரும் முழக்கப் போராட்டம் மற்றும் தர்ணா போராட்டம் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்ககம் வாயிலில் நேற்று நடந்தது.
மண்டலத் தலைவர் ஆனந்த கருணாகரன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் சங்கர சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் சகாயசதீஷ் கோரிக்கை விளக்கி பேசினார். ஆக்டா ஓய்வூதியர் அமைப்பு செயலாளர் மணலி சோமசுந்தரம் துவக்கி வைத்தார். தலைவர் ராஜா, மன்சூர், முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.போராட்டத்தில், ‘திருச்சி மண்டல உதவி பெறும் கல்லூரி ஆசிரியர்களின் மாத சம்பளத்தை உரிய காலத்தில் வழங்காமல் காலம் தாழ்த்துவது. இளையோர், முதியோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திடாமை. சேமநல நிதி முன்பணம் பெறுதல். ஈட்டிய விடுப்பு சரண் செய்தல். தடையில்லா சான்று அளித்தல் மற்றும் பேராசிரியர்களின் இதர கோப்புகளில் கையெழுத்திட மறுப்பது. தேசிய கல்லூரியில் 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, புதிய ஊதியத்தை பெறாத பேராசிரியர்களின் பிரச்னைகளை தீர்த்திடாமை. பணி நிறைவு பெற்ற ஓய்வூதியர்களின் பயன்களை அளிப்பதில் தாமதம். வெளிநாட்டில் நடைபெறும் கருத்தரங்கு போன்ற நிகழ்ச்சிகளுக்கு பணிமேல் விடுப்பில் செல்லும் பேராசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தி வைப்பது. ஒரு நாளைக்கு ஐந்து கையெழுத்துக்கு மேல் போடுவதற்கு மறுப்பது என ஆசிரியர் விரோத போக்கை கடைப்பிடிக்கும் திருச்சி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் உஷாவால் ஏற்பட்டுள்ள சிக்கல்களை களைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தப்பட்டது. திருச்சி மண்டல செயலாளர் இளங்கோ நன்றி கூறினார்.

Tags : college teachers ,
× RELATED 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி...