×

குழந்தைகளின் ரத்தசோகையை தடுக்க விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி வென்றவர்களுக்கு கேடயம், பதக்கம் பரிசு

திருச்சி, செப்.25: குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடை தடுக்க விழிப்புணர்வு நடைஓட்டம் (வாக்கத்தான்) போட்டி திருச்சியில் நேற்று நடந்தது. தேசிய ஊட்டச்சத்து குழுமம், ‘போஷான் அபியான்’ திட்டத்தின் மூலம் ஒருங்கிணைந்த குழந்தை வளார்ச்சி திட்டத்தின் சார்பில் இம்மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவின் முக்கிய நோக்கம் பிறந்த குழந்தை முதல் 6 வயது வரையிலான குழந்தைகளிடத்தில் குள்ளத்தன்மை, மெலிதல் தன்மை, கடுமையான எடை குறைவு தடுத்தல், எடைகுறைவான குழந்தைகள் பிறப்பை தடுத்தல், குழந்தைகளிடம் மற்றும் பெண்களிடையே ஆன ரத்தசோகையை தடுத்தல் போன்றவை ஆகும்.மேலும் இக்கருத்துகள் தொடர்பாக பேரணி, நடைபயணம், வானொலி மற்றும் ஊடகங்களில் பிரசாரம் செய்தல், பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கண்காட்சி நடத்துதல், வில்லுப்பாட்டு, கும்மிப்பாட்டு போன்ற நாட்டுப்புற கலைகள் மூலம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அனைத்து வட்டாரங்களிலும் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக ரத்தசோகை குறித்த விழிப்புணர்வு நடைஓட்டம் (வாக்கத்தான்) திருச்சியில் நேற்று நடந்தது. திருச்சி கலெக்டர் சிவராசு தலைமை வகித்து கொடியசைத்து வாக்கத்தானை துவக்கி வைத்தார். இந்த நடைஓட்டமானது கலெக்டர் அலுவலகத்தில் தொடங்கி வெஸ்ட்ரி பள்ளியை அடைந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நடைஓட்டத்தின் முடிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் முதல் 5 இடத்தை பெற்ற வெற்றியாளர்களுக்கு கலெக்டர் சிவராசு கேடயம் மற்றும் பதக்கம் வழங்கி கவுரவித்தார். மேலும் இதில் பங்கேற்றவர்களுக்கு ரத்தச்சோகை பற்றிய கைப்பிரதிகள் வழங்கப்பட்டன. ரத்தசோகை இல்லாத வலிமையான தேசத்தினை உருவாக்குவோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். அங்கன்வாடி பணியாளர்கள் ஊட்டசத்து மற்றும் இரத்தசோகை குறித்த பாடல்கள் மற்றும் கும்மியாட்டம் நடத்தி பங்கேற்றவர்களை உற்சாகப்படுத்தினர்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டப்பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் புவனேஸ்வரி செய்திருந்தார். மகளிர் திட்ட இணை இயக்குநர் சரவணன், கலெக்டர் நேர்முக உதவியாளர் (பொது) பழனிதேவி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் பிரபு மற்றும் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Shield ,contest winners ,blood loss ,children ,
× RELATED பிற்படுத்தப்பட்ட மாணவர் விடுதிகளுக்கு கேடயம்