×

திருச்சியில் பாடி பில்டர் கொலை வழக்கில் தேடப்பட்ட ஆட்டோ டிரைவர் குளித்தலை கோர்ட்டில் சரண்

திருச்சி, செப்.24: திருச்சியில் பாடி பில்டர் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ டிரைவர் நேற்று குளித்தலை கோர்ட்டில் சரணடைந்தார்.திருச்சி உறையூர் மின்னப்பன் தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் மணிகண்டன்(22). பாடி பில்டரான இவர், ஜிம் உடற்பயிற்சி கருவிகளை பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார். இவரை ஜிம் மணிகண்டன் என்றும் அழைப்பார்கள். இவரது நண்பர் சடைமணி(33). பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது பக்கத்து வீட்டுக்காரர் செந்தில்குமார்(43). பீரோ கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செந்தில்குமார் தன்னிடம் வந்து அடிக்கடி வம்பு இழுக்கிறார். அவரை கண்டித்து வைக்கும்படி சடைமணி, தனது நண்பர் ஜிம் மணிகண்டனிடம் கூறி உள்ளார். பார்த்துக்கொள்ளலாம், பொறுமையாக இரு என மணிகண்டன் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 23ம் தேதி விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்த செந்தில்குமாருக்கும், சடைமணிக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதை தனது நண்பர் மணிகண்டனிடம் சடைமணி கூறினார். உடனே மணிகண்டன் அங்கு வந்து செந்தில்குமாரை கண்டித்தார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன், செந்தில்குமாரை கீழே தள்ளி தாக்கினார். இதை கண்ட செந்தில்குமாரின் அக்கா மகன் ஆட்டோ டிரைவரான புகழேந்தி(23) அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மணிகண்டனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் மணிகண்டன் இறந்தார். இது குறித்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து புகழேந்தியை தேடி வந்தனர். அமைச்சர் வளர்மதி வீட்டு அருகே நடந்த இந்த கொலை சம்பவம் உறையூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ஆட்டோ டிரைவரான புகழேந்தி நேற்று குளித்தலை கோர்ட்டில் சரணடைந்தார். நீதிபதி உத்தரவின் பேரில் புகழேந்தியை போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags : Auto driver ,Trichy ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...