×

திருவெறும்பூர் அருகே பசுமாட்டை மின்சாரம் பாய்ச்சி கொன்ற புகார் போலீசார் அலட்சியம்: பொதுமக்கள் அதிருப்தி

திருவெறும்பூர், செப்.25: திருவெறும்பூர் அருகே கும்பக்குடியில் பசுமாட்டை மின்சாரம் பாய்ச்சி கொன்றதாக கொடுத்த புகாரின் மீது நவல்பட்டு போலீசார் நடவடிக்கை எடுக்காதது பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
திருவெறும்பூர் அருகே உள்ள கும்பக்குடி அரிசன மேட்டு தெருவைச் சேர்ந்தவர் அடைக்கன். இவரது மகன் தங்கபாண்டியன்(36). இவர் 3 கறவை மாடுகளை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சடையன் மகன் இளையராஜா என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கு நவல்பட்டு காவல்நிலையத்தில் உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கப்பாண்டியனுக்கு சொந்தமான பசுமாடு அந்த பகுதியில் உள்ள மேய்ச்சல் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பசுமாட்டை இளையராஜா உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார் இதுகுறித்து தங்கபாண்டியன் கேட்டதற்கு அவரை தகாத வார்த்தையால் திட்டி உள்ளார். மேலும் இளையராஜாவின் தூண்டுதலின் பேரில் அருணகிரி மகன் ராமகிருஷ்ணன் என்பவர் மேய்ந்துகொண்டிருந்த பசுமாட்டை அவரது வயலில் உள்ள மின் கம்பத்தில் இருந்து மின் மோட்டார் மூலம் மின்சாரத்தை பாய்ச்சி கொன்றுவிட்டதாக தங்கபாண்டியன் நவல்பட்டு போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் நவல்பட்டு போலீசார் சம்பவ இடத்தை சென்று பார்க்கவில்லை என தெரிகிறது.இந்நிலையில் தங்கபாண்டியன் தனது பசுமாட்டை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்பதற்காக குண்டூர் அரசு கால்நடை மருத்துவரை அணுகினார். அதற்கு கால்நடை மருத்துவர் காவல் நிலையத்திலிருந்து வழக்குப்பதிவு அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனை கடிதம் வந்தால் மட்டுமேதான் இறந்து போன பசுமாட்டை உடற்கூறு ஆய்வு செய்ய முடியும் என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டதாக தெரிகிறது. இச்சம்பவம் குறித்து நவல்பட்டு போலீசார் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதால் பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : greenhouse ,Thiruverumbur ,
× RELATED பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ம்...