அக்டோபரில் சென்னையில் மறியல் போராட்டம் அய்யாக்கண்ணு பேச்சு

மணப்பாறை செப்.25:  மணப்பாறையை அடுத்த பூலாம்பட்டியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மணப்பாறை, வையம்பட்டி, துவரங்குறிச்சி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் காவிரி, வைகை, குண்டாறு திட்டத்தை வையம்பட்டி வழியாக கொண்டுவர கோரியும், வெள்ளம் வரும் காலங்களில் பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு டேம், கண்ணூத்து டேம்களை நிரப்பக்கோரியும் கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டது.மேலும் மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்யவேண்டும். விவசாயிகளின் மீது வங்கிகளில் உள்ள அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்யவேண்டும், 2016-17ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு பேசுகையில், கடுமையான வறட்சியை தமிழகம் கண்டது. உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், தமிழக முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்து விவசாய கடனை தள்ளுபடி செய்யவேண்டும். இல்லையென்றால் அக்டோபர் முதல் வாரத்தில் சென்னையில் பிரமாண்ட மறியல் போராட்டம் நடத்தப்படும். மணப்பாறையை அடுத்த துவரங்குறிச்சியில் 1 லட்சம் விவசாயிகளை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்துவது என முடிவுவெடுக்கப்பட்டது. மேட்டூரிலிருந்து வைகை, குண்டாறுகளை இணைத்து பஞ்சப்பட்டி ஏரி, பொன்னணியாறு, கண்ணூத்து போன்ற டேம்களில் இணைத்து இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: