×

மேலஉசேன் கிராமத்தில் பெண் தற்கொலைக்கு காரணமான சுற்றுச்சுவர் உடைப்பு

பெரம்பலூர், செப். 25: ஆலத்தூர் தாலுகா மேல உசேன் நகரம் கிராமத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொண்டதற்கு காரணமான சுற்றுச்சுவரை, உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் அடித்து உடைத்தனர். ஆலத்தூர் வட்டம், அல்லிநகரம் ஊராட்சிக்குட்பட்ட மேல உசேன் நகரத்தில் உள்ள தனது வீட்டுக்கு செல்லும் பாதையை மறைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மின் மோட்டார் அமைத்ததைக் கண்டித்து கடந்த சனிக்கிழமை ராமதாஸ் மனைவி பூங்கொடி (56), அவரது மருமகள் தங்கலட்சுமி (33) ஆகியோர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தனர்.இதில், பலத்த காயமடைந்து அரியலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பூங்கொடி ஞாயிற்றுக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தங்கலட்சுமி அரியலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுதொடர்பாக, ஆலத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்பட 12 பேர் மீது குன்னம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்நிலையில், தீக்குளித்து உயிரிழந்த பூங்கொடியின் உடல் பிரேத பரிசோதனைக்குப் பிறகு அவரது குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை ஒப்படைக்கபட்டு, மாலையில் இறுதிச் சடங்குகள் நடைபெற்றது. இறுதிச் சடங்குக்காக மேல உசேன் நகரத்தில் கூடியிருந்த பூங்கொடியின் உறவினர்கள், வீட்டைச் சுற்றி ஊராட்சி நிர்வாகம் சார்பில் எழுப்பப்பட்டிருந்த சுற்றுச் சுவரை அடித்து நொறுக்கினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. இதையடுத்து, அங்கு அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் குவிக்கப் பட்டிருந்தனர்.

Tags : Circulation breakdown ,suicide ,village ,Melauzan ,
× RELATED கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை...