×

மகிழ்ச்சி ஒருபுறம்...சிரமம் மறுபுறம்... தொடர் மழையால் ஏற்காடு மலைப்பாதையில் திடீர் அருவிகள்

சேலம், செப். 25: சேலம் மாவட்டத்தில் பெய்து வரும் பலத்தமழையால் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமான ஏற்காட்டில் வித்தியாசமான சூழல் ஏற்பட்டுள்ளது. மலைப்பாதையில் புதிய அருவிகள் உருவாகி இருப்பது மகிழ்சியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் மலைப்பாதையில் சாலைகள் சிதிலமடைந்து மரங்கள் முறிந்து கிடப்பது சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்றும், மலைகளின் இளவரசி என்றும் வர்ணிக்கப்படுகிறது. தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக திகழும் ஏற்காட்டிற்கு அண்டை மாநிலங்களில் இருந்தும் அதிகளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் தொடரும் மழையின் தாக்கம் ஏற்காட்டிலும் எதிரொலிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழையால் ஏற்காட்டில் பயணிகளுக்கு மகிழ்ச்சியும், சிரமமும் ஒரே ேநரத்தில் உருவாகும் வித்தியாசமான சூழல் நிலவுகிறது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறுகையில், ‘‘அடிவாரத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் மலைப்பாதை கொண்டை ஊசி வளைவுகளில் ஆங்காங்கே மழை நீர்பெருக்கெடுத்து அருவி போல் கொட்டிக் கொண்டிருக்கிறது. பசுமையான அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெள்ளியை உருக்கியது போல் கொட்டும் இந்த அருவிகள், கண்ணுக்கு விருந்தளிக்கிறது. அதே போல் குளிர்ந்த காற்றும் பனிமூட்டமும் புதிதாக வருவோருக்கு இனிய அனுபவமாக உள்ளது. இப்படி மகிழ்ச்சி ஒரு புறமிருக்க, மலைப்பாதை சாலைகள் மழையால் சிதிலமடைந்து கிடப்பதும், ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து கிடப்பதும் பெரும் சிரமமாக உள்ளது. அதேபோல் ஏற்காடு நகரப்பகுதியில் மழையால் தொடர்ந்து பல மணிநேரத்திற்கு நீடிக்கும் மின்தடையும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம் அளிப்பதாக இருக்கிறது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள், மலைப்பாதையில் தரமான சாலைகள் அமைத்து பராமரிப்பதோடு முறிந்து விழும் மரங்களையும் உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும். இதே போல் மின்தடைக்கும் நிரந்தர தீர்வு காண வேண்டும். இதற்குரிய நடவடிக்ைககளை மேற்கொண்டால்,   மழைக்காலத்தில் ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மகிழ்ச்சியான தருணங்கள் மட்டுமே மனதில் பதியும்,’’ என்றனர்.

Tags : highway ,Yercaud ,
× RELATED சென்னை – பெங்களூரு தேசிய...