×

கொல்லிமலையில் பலத்த மழை பவித்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது

நாமக்கல், செப்.25: கொல்லிமலை பகுதியில் பெய்த பலத்த மழையால் பவித்திரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. கொல்லிமலை மற்றும் சுற்றுப்புற பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால், கொல்லிமலையில் உள்ள ஓடைகள் மற்றும் ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்தது. மலையின் பல பகுதிகளில் ஆங்காங்கே பநீரூற்றுகள் தோன்றியுள்ளது. தொடர் மழையால் கொல்லிமலையில் தெற்கு பகுதியில் உள்ள பவித்திரம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஆனால், ஏரிக்கு வரும் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் அடைப்பு ஏற்பட்டு அருகில் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

 மாந்தோப்பு மற்றும் சோளப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இந்த அடைப்புகளை பொக்லைன் மூலம் சரி செய்ததால் ஏரிக்கான நீர்வர்தது மேலும் அதிகரித்தது. ஆனால், ஏரியின் மதகுகளில் ஷட்டார்கள் இல்லாததால் அந்த தண்ணீர் அப்படியே வெளியேறி வருகிறது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் மணல் மூட்டைகளை அடுக்கி தண்ணீர் வெளியேறாமல் தடுத்து வருகிறார்கள்.நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் காலை வரையிலும் பெய்த மழை அளவு விபரம் வருமாறு: குமாரபாளையம் 40 மி.மீட்டர், மங்களபுரம் 47 மி.மீ., மோகனூர் 18 மி.மீ., நாமக்கல் 12 மி.மீ., பரமத்தி 9 மி.மீ., புதுச்சத்திரம் 3 மி.மீ., ராசிபுரம் 18 மி.மீ., சேந்தமங்கலம் 18 மி.மீ., திருச்செங்கோடு 72 மி.மீ., கொல்லிமலை 23 மி.மீ., கலெக்டர் அலுவலகம் 4 மி.மீ.

Tags : lake ,Kolli Hills ,
× RELATED தேக்கடி ஏரியை நீந்தி கடந்த புலி படகு சவாரியில் பார்த்து ரசித்தனர்