×

முட்டை ஏற்றுமதியை அதிகப்படுத்த நாமக்கல் தனி மண்டலமாக மாறும்

நாமக்கல், செப். 25:  முட்டை ஏற்றுமதியை அதிகரிக்க நாமக்கல் தனி மண்டலமாக மத்திய அரசு அறிவிக்க உள்ளதாக சின்ராஜ் எம்பி தெரிவித்தார். நாமக்கல்லில், தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் சார்பில் நேற்று கருத்தரங்கு நடைபெற்றது. இதற்கு நிறுவன தலைவர் நல்லதம்பி தலைமை வகித்தார். செயலாளர் சுந்தர்ராஜன் வரவேற்று பேசினார். இதில் தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளனத்தின் துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம், முட்டை வியாபாரிகள் சங்கத்தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் பேசினார்கள்.தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கத்தின் தலைவர் சின்ராஜ் எம்பி கலந்து கொண்டு பேசியதாவது: கோழிப்பண்ணை தொழில் கடந்த 7 மாதமாக பல பிரச்னைகளை சந்தித்து வருகிறது. தீவன தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி விலை அதிகரித்துவிட்டது. இந்த தொழிலில் உள்ள பிரச்னைகளை போக்க மாதத்துக்கு ஒரு முறை அனைத்து அமைப்பினரும் உட்கார்ந்து பேசவேண்டும்.

முட்டைகளை கடனுக்கு வியாபாரிகளிடம் கொடுப்பதால் நமக்கு பாதுகாப்பு இல்லை. வருகிற 1ம் தேதி முதல் முட்டை வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக உள்ள வியாபாரிகளுக்கு மட்டுமே முட்டை விற்பனை செய்யவேண்டும். தொழிலை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகளின் சலுகைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வெளிநாடுகளில் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறோம்.வயது முதிர்ந்த முட்டைக்கோழிகளுக்கு இனி பண்ணையாளர்களே விலை நிர்ணயம் செய்து அறிவிக்கப்படும். யாரும் அந்த விலைக்கு குறைவாக கொடுக்கவேண்டாம். என்இசிசி முட்டை விலை நிர்ணயம் செய்வதில் பல குழப்பங்கள் இருக்கிறது. வரும் 26ம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முட்டைக்கு விலை நிர்ணயம் செய்வதில் உள்ள பிரச்னைகள் குறித்து பேசப்படும். முட்டை ஏற்றுமதியை அதிகப்படுத்தும் வகையில், நாமக்கல்லை தனி மண்டலமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தியுள்ளேன். இதை மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது. ஒரு வார காலத்துக்குள் நல்ல முடிவு வரும்.

சத்துணவுக்கு சப்ளை செய்யும் முட்டைக்கு நல்ல விலை கிடைக்க பண்ணையாளர்கள் அடங்கிய கமிட்டி விரைவில் அமைக்கப்படும். சத்துணவு முட்டை வினியோகம் எப்படி நடக்கிறது என்பதை கண்காணிக்க எனக்கு எம்பி என்ற முறையில் அதிகாரம் இருக்கிறது. இதற்கான கடிதத்தை எனக்கு மத்திய அரசு விரைவில் வழங்க உள்ளது. எனவே இனி சத்துணவு முட்டைக்கு பண்ணையாளர்கள் ஒற்றுமையாக இருந்து நல்லவிலை வாங்குவோம். இவ்வாறு சின்ராஜ் எம்பி பேசினார்.
துணைத்தலைவர் ஆவேசம்:  கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்ளேமன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் பேசுகையில், எனக்கு இந்த கூட்டத்துக்கு அழைப்பு இல்லை. அழையா விருந்தாளியாக வந்துள்ளேன். எங்களின் அமைப்பை பற்றி வாட்ஸ் அப்பில் அவதூறாக சில கருத்துகளை தொடர்ந்து பரப்பி வருகிறார்கள். சத்துணவு முட்டை சப்ளை தொடர்பாக எங்கள் மீது தேவையற்ற விமர்சனங்களை தெரிவிக்கக்கூடாது. எதாவது கருத்து வேறுபாடு இருந்தால் இங்கேயே வந்து பேசுங்கள் என்றார். இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. வாங்கிலி சுப்பிரமணியத்துக்கு ஆதரவாக சில பண்ணையாளர்களும், அவரது கருத்துக்கு எதிராக சிலரும் பேசினார்கள். ஒரே நேரத்தில் பண்ணையாளர்கள் பலரும் சத்தம் போட்டதால் கூட்டத்தில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது. அவர்களை சின்ராஜ் எம்பி சமாதானப்படுத்தி, பண்ணையாளர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். யாரை பற்றியும் வாட்ஸ் அப்பில் தவறாக கருத்து பரப்பக் கூடாது என்றார். 

Tags : zone ,
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...