×

கரும்பில் வெள்ளை ஈ தாக்குதல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

திருச்செங்கோடு, செப்.25: திருச்செங்கோடு வட்டாரம், மொளசி கிராமப்பகுதிகளில் கரும்பு பயிரில் வெள்ளை ஈ மற்றும் இடைக்கணு புழு தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் ஜெயமணி தலைமையில் வேளாண்மை அலுவலர், துணை வேளாண்மை அலுவலர் ஆகியோர், கள ஆய்வு மேற்கொண்டு கீழ்கண்ட பரிந்துரைகளை விவசாயிகள் கடைபிடிக்க ஆலோசனை வழங்கியுள்ளனர்.
கரும்பில் வெள்ளை ஈ தாக்குதலால் இலைகள் வெளிர் மஞ்சள் நிறமாக மாறி, பின்பு தாக்குதல் அதிகமாகும் போது இலைகள் காய்ந்து விடுகின்றன. வடிகால் வசதி குறைவான நிலங்களில் இப்பூச்சி தாக்குதல் அதிகம் தென்படுகிறது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கவிடாமல் வடிகால் வசதியை பெருக்கவும். 5வது மற்றும் 7வது மாதங்களில் தோகைகளை உரித்து வயலை சுத்தமாக பராமரிக்க    வேண்டும். அதிகப்படியான தழைச்சத்தினை இடுவதை தவிர்த்து மண் ஆய்வுப் பரிந்துரைப்படி தேவையான அளவு உரத்தினை இட வேண்டும். வெள்ளை ஈ தாக்குதல் தென்பட்டால், கீழ்கண்ட பூச்சிக் கொல்லிகள் ஏதெனும் ஒன்றை தெளிக்கலாம்.

பெனிட்ரோத்தியான் 50 இசி 2 லிட்டர் ஒருஹெக்டருக்கு அசிபேட் 2 கிராம் ஒரு லிட்டருக்கு மானோகுரட்டோபாஸ் 36 சிசி 2 லிட்டர் ஒரு ஹெக்டருக்கு, குளோரிபைரிபாஸ் 2 லிட்டர் ஒரு  ஹெக்டருக்கு தெளிக்க வேண்டும்.
அதே போல், இடைக்கணுப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் 1 எஸ்எல் ஒரு ஏக்கருக்கு என்ற அளவில் 15 நாள் இடைவெளியில் 6 முறை பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம். ஒரு ஹெக்டருக்கு  இனக்கவர்ச்சி பொறிகள் 10 நான்காவது மாதம் முதல் பயன்படுத்தலாம். 5வது மற்றும் 7வது மாதங்களில் தோகையினை விரித்து வயலினை சுத்தமாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்

Tags : fly attack ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...