×

போச்சம்பள்ளி அருகே மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டோர் பாதிப்பு

போச்சம்பள்ளி, செப்.25: போச்சம்பள்ளி அருகே பெரியபுளியம்பட்டியில் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளுக்கு நாள் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தொடர் மழை பெய்து வருகிறது. போச்சம்பள்ளியில் அதிகபட்ச மழையளவுபதிவாகியுள்ளது. போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம் ஒன்றிய பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி, சாக்கடைகளில் பிளாஸ்டிக் மற்றும் குப்பைகள் அடைத்துள்ளதால் குடியிருப்பு மற்றும் வணிக வளாக பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. சாக்கடை அடைப்பால், கொசு உற்பத்தி அதிகரித்து பல்வேறு நோய்கள் பரவி வருகிறது. இந்நிலையில், காவேரிப்பட்டிணம் ஒன்றியத்தில் பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பெரியபுளியம்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் கடந்த சில நாட்களாக சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மர்ம காய்ச்சல் பாதித்த அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வரும் நிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதுகுறித்து பெரியபுளியம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் கூறுகையில், கிராமத்தில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை தூர்வார ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவேரிப்பட்டிணம் பிடிஓவிடம் புகார் கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மர்ம காய்ச்சல் குறித்து தகவலறிந்த சுகாதாரத்துறையினர் இங்கு வந்து மாத்திரைகளை மட்டும் வழங்கி விட்டு சென்றனர். ஆனால், காய்ச்சல் குறையாமல், நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது. கிராமத்தில் தற்போது வரை 50க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5ம் வகுப்பு படிக்கும் மாணவன் ரிஷிகான், 9ம் வகுப்பு மாணவன் ரிமா, 7ம் வகுப்பு புவன் ஆகியோர் காலாண்டு தேர்வு கூட எழுத முடியாமல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வீட்டிலே முடங்கியுள்ளனர். சுகாதார சீர்கேட்டால் தான் அனைவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

காய்ச்சலை பயன்படுத்தி அதிகரித்த போலி மருத்துவர்கள்: போச்சம்பள்ளி பகுதியிலுள்ள கிராமங்களில் போலி மருத்துவர்கள் புற்றீசல் போல் அதிகரித்துவிட்டனர். அரசு மருத்துவமனைகளில் போதிய மருத்துவ வசதிகளில் கிடைக்காததால், அப்பகுதியிலுள்ள கிளினிக்குகளை பொதுமக்கள் நாடி வருகின்றனர். இதை பயன்படுத்தி கொண்ட 10வது, 12வது படித்த போலி மருத்துவர்கள் கிராமங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஊசி போட்டு, மருந்து மாத்திரைகள் கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.தற்போது கிராமங்களில் மர்ம காய்ச்சல் பரவி வருவதை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் நேரடியாக கிராமத்திற்கு சென்று மருத்துவம் செய்து வருகின்றனர். பொதுமக்களின் உயிருடன் விளையாடும் இந்த போலி மருத்துவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Pochampally ,
× RELATED கேரளாவிலிருந்து தென்காசி வந்த 2...