×

தேன்கனிக்கோட்டை அருகே கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு

கிருஷ்ணகிரி, செப்.25: தேன்கனிக்கோட்டை அருகே கோழிப்பண்ணை அமைக்க அனுமதி வழங்க கூடாது என தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கலெக்டரிடம் மனு அளித்தனர். கெலமங்கலம் ஒன்றிய தமிழக விவசாயிகள் சங்க தலைவர் மணி தலைமையில் விவசாயிகள் கலெக்டர் பிரபாகரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேன்கனிக்கோட்டை பேரூராட்சி வார்டு எண் 17க்கு உட்பட்ட  கவிநரசிம்மர் சாமி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள விவசாய நிலத்தில், கர்நாடகா மாநிலம் ஒங்கசந்திராவை சேர்ந்த நபர் ஒருவர் கோழிப்பண்ணை அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறார். அப்பகுதியில் கோழிப்பண்ணை அமைத்தால், கோயிலுக்கு வரும் பக்தர்கள் துர்நாற்றத்தால் பாதிக்கப்படுவர்.

மேலும், அதே பகுதியில் 43 ஏக்கரில் திம்மசந்திரம் ஏரி தண்ணீரை நம்பி 300 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்நிலையில், இங்கு கோழிப்பண்ணை அமைக்கப்பட்டால் விவசாய நிலம், ஏரியில் உள்ள தண்ணீர், ஆழ்துளை கிணற்றின் நீர் முற்றிலும் மாசுபடுவதோடு, விவசாயம் பாதிக்கப்படும். கோழிப்பண்ணை அமைக்கப்பட்டால் தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட முடியாத நிலை ஏற்படும். கோழிப்பண்ணையில் இருந்து வரும் ஈக்களால் பொதுமக்களும், சுற்றுச்சூழலும் மாசு ஏற்படும். எனவே, இந்த மனு மீது உரிய விசாரணை நடத்தி, விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை அமைக்க அனுமதி மறுக்க வேண்டும்.  இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : poultry land ,Thenkanikottai ,
× RELATED சூதாடிய 5 பேர் கைது