×

தளி ஒன்றியத்தில் ஏரி, குளம் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஆய்வு

தேன்கனிக்கோட்டை, செப்.25: தளி ஒன்றியத்தில் ஏரி, குளம் தூர்வாரும் பணிகளை கலெக்டர் பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தளி ஒன்றியத்திற்குட்பட்ட குருபரப்பள்ளி, காரண்டப்பள்ளி, தொட்டபிலிமுத்திரை, முளுவனப்பள்ளி, மல்லசந்திரம் ஆகிய கிராமங்களில் ஏரி, குளம் தூர்வாரும் பணிகள், தடுப்பணை கட்டுமான பணிகள் மற்றும் பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு கட்டுமான பணிகள் மற்றும் பள்ளி கட்டிடம் பழுதுபார்த்தல், சமையல் கூடம் மாற்றி அமைத்தல் உள்ளிட்ட   பணிகளை கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.முன்னதாக, கலெக்டர் குந்துக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட குருபரபள்ளியில் இ.வி.பி ஆப் மூலம் வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி சரிபார்க்கும் பணிகளை வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியலை கொண்டு ஆய்வு செய்தார். தொட்டபிளி முத்திரை கிராமத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் ₹1 லட்சம் மதிப்பில் கோபால் ஐயன் குட்டை தூர்வாரப்பட்டுள்ளதையும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ₹1.70 லட்சம் மதிப்பில்  மல்லேகடுவு என்பவரின் வீடு கட்டுமான பணிகளையும், முளுவனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்து ஆசிரியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, பள்ளியில் சமையல் கூடம் மற்றும் பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளதை பார்வையிட்டு ஊரக வளர்ச்சித்துறை சார்பில் புதிய சமையல் கூடம் மற்றும் பள்ளிகட்டிடம் கட்ட கருத்துரு தயார் செய்து பணிகளை துவக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து, காரண்டப்பள்ளியில் 2017-2018ம் நிதியாண்டில் ₹3 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சிறு தடுப்பணை பணிகளை பார்வையிட்டு பணிகளை விரைவாக முடிக்க அலுவர்களுக்கு உத்தரவிட்டார். மல்லசந்திரம் ஊராட்சி பென்னங்கூர் பெட்டப்பன் கொடிகை ஏரியில் ₹5 லட்சம் மதிப்பில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் சென்னகிருஷ்ணன், பொறியாளர் குமார், தாசில்தார் பாலசுந்தரம், துணை தாசில்தார் வளர்மதி, வருவாய் ஆய்வாளர் பேபி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், பணி மேற்பார்வையாளர் சம்பங்கி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags : Collector Study of Lake and Pond Improvement Works ,
× RELATED கிருஷ்ணகிரியில் ரஜினி மக்கள்மன்ற நிர்வாகிகள் கூட்டம்