×

டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஈரோடு, செப். 25: தமிழகத்தில் டெங்கு பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.இதுகுறித்து அதன் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவ துவங்கி உள்ளது. சென்னையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி 6 வயது குழந்தை இறந்தது வேதனையளிக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் குழந்தைகள், சிறுவர்கள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் பெரியோர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு குணப்படுத்த முடியாமல் இறந்துள்ளனர். டெங்கு காய்ச்சலை ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டு விட்டால் இந்த ஆண்டும் அதிக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் சுகாதார சீர்கேடு தான் காய்ச்சல் வேகமாக பரவுவதற்கு முக்கிய காரணம்.

உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத காரணத்தினால் தமிழக அரசு எவ்வித துரித நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாமல் பல்வேறு விசயங்களில் திணறி வருகிறது. டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து தமிழக மக்களை காப்பாற்ற தமிழக அரசு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் நிலவேம்பு குடிநீரை பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு கொடுக்க முன்வர வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சர் தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளுக்கும் சென்று டெங்கு காய்ச்சல் குறித்து சுற்றறிக்கை அனுப்பி மக்களுடைய நலனில் அக்கறையோடு செயல்பட வேண்டும். இவ்வாறு ஈஸ்வரன் கூறியுள்ளார்.

Tags : spread ,
× RELATED எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் அத்துமீறல் வாலிபருக்கு 3 ஆயுள் தண்டனை