×

கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டம்

கோவை, செப்.25: தொழிலாளர் நல  உரிமை சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்து தமிழ்நாடு ஏ.ஐ.டி.யூ.சி கட்டிட கட்டுமான தொழிலாளர் சங்கத்தினர்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  தொழிலாளர் நல உரிமை சட்டங்களை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் , அரசிடம் உள்ள நாற்பாதாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான  தொழிலாளர்  நல நிதியை வேறு பயன்பாட்டிற்கு எடுத்து பயன்படுத்தும் முயற்சியை கைவிட கோரியும், தொழிலாளர்களுக்கு எதிரான புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வருவதை கண்டித்தும் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை சிவானந்த காலனியில்  நேற்று தர்ணா போராட்டம் நடந்தது. போரட்டத்தை ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட கவுன்சில் தலைவர் கோவிந்தராஜன் துவக்கி வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சுந்தரம், ஏ.ஐ.டி.யு.சி மாவட்ட கவுன்சில் பொது செயலாளர் தங்கவேல், சி.ஐ.டி.யு மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, எச்.எம்.எஸ் மாநில செயலாளர் ராஜாமணி, ஐ.என்.டி.யு.சி மாவட்ட தலைவர் பாலசுந்தரம், தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் இளங்கோ, மறுமலர்ச்சி தொழிலாளர் சங்கத்தின் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  

 ஏ.ஐ.டி.யு.சி மாநில செயலாளர் ஆறுமுகம் பேசுகையில், ‘‘தொழிற்சங்கங்களின் பல்வேறு போராட்டங்களின் விளைவாக தான் எட்டு மணி நேர வேலை, போனஸ், வருங்கால வைப்பு நிதி, மூப்பு நிதி, வேலை பாதுகாப்பு உள்ளிட்ட 44 சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. மத்தியில் ஆட்சியில் உள்ள மோடி தலைமையிலான அரசு தொழிலாளர் நல உரிமை சட்டங்களை தொடர்ந்து பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ரூ.40  ஆயிரம் கோடி மதிப்பிலான தொழிலாளர் நல நிதியை வேறு பயன்பாட்டிற்கு மடை மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தொழிலாளர்களின் நல உரிமைகளை பறிக்கும் இந்த அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மக்களின் பணத்தை வாரி இறைக்கிறது. தொழிலாளர் விரோத மனப்பான்மையுடன் நடந்து கொள்ளும் மத்திய அரசை கண்டித்தே இந்த போராட்டம் நடைபெறுகிறது,’’ என்றார்.

Tags :
× RELATED 8 வழிச்சாலை திட்ட வழக்கை கண்டித்து போராட்டம்