×

கட்டட தொழிலாளர்கள் தர்ணா

ஈரோடு, செப். 25:  மத்திய அரசின் தொழிலாளர் விரோத சட்ட திருத்தங்களை திரும்ப பெற வலியுறுத்தி ஈரோட்டில் ஏஐடியுசி கட்டட தொழிலாளர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஈரோடு சென்னிமலை ரோட்டில் தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முன்பு நேற்று நடந்த தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் மோகன்குமார், நாகப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் வெங்கடாசலம் கலந்து கொண்டு தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். இதில், பொதுசெயலாளர் சுந்தரம், பொருளாளர் குணசேகரன், துணைச் செயலாளர்கள் ராஜேஷ், பாபு, ராஜா மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மாவட்ட தலைவர் சின்னச்சாமி கூறியதாவது: மத்திய அரசிடம் இருந்த 44 தொழிலாளர் சட்டங்களை தற்போது, 4 ஆக சுருக்கி தொழிலாளர்களுக்கு விரோதமாகவும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் மாற்றியுள்ள சட்ட திருத்தங்களை திரும்ப பெற வேண்டும். கட்டுமான தொழிலாளர் பாதுகாப்பு சட்டமும், நலவாரிய சட்டமும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள 4 கோடி கட்டுமான தொழிலாளர்களின் வாரிய பதிவுகள் ரத்தாகும் நிலை உருவாகி உள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு இதுநாள் வரை கிடைத்து வந்த உதவிகள், விபத்து மரண நிதி, ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் கிடைக்காத நிலை ஏற்படும். எனவே, தொழிலாளர்களுக்கு நடைமுறையில் இருந்து வரும் பாதுகாப்பினையும், பலன்களையும் தொடர்ந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு சின்னசாமி கூறினார்.

Tags : construction workers ,
× RELATED நீலகிரி மாவட்டம் உதகை அருகே கட்டுமானப்பணியின் போது மண் சரிந்து விபத்து