×

விவசாய விளைபொருட்களை உலர வைக்க பயன்படுத்திய களத்தில் குடியிருப்பு கட்ட எதிர்ப்பு

ஈரோடு, செப். 25: விவசாய விளைபொருட்களை உலர வைக்க பயன்படுத்திய களத்தில் குடியிருப்பு கட்ட விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்டிஓ.,விடம் புகார் மனு அளித்தனர். ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மொடக்குறிச்சி தாலுகா சின்னியம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரும்பள்ளம் பாசன விவசாயிகள் ஈஸ்வரமூர்த்தி என்பவர் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:மொடக்குறிச்சி தாலுக்கா நஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் பெரும்பள்ளம் பாசனத்தை நம்பி 100க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெற்று வருகிறது. இந்த பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் இங்குள்ள இடத்தை பல தலைமுறைகளாக களமாக பயன்படுத்தி வருகிறோம். இந்நிலையில், களம் உள்ள புறம்போக்கு இடத்தில் தமிழ்நாடு குடிசை மாற்றுவாரியத்தின் சார்பில் 96 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட இடத்தை கையகப்படுத்தினர்.

இதற்கான பணிகளையும் துவக்கி உள்ளனர். பல தலைமுறைகளாக நாங்கள் களமாக பயன்படுத்தி வந்த நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட எதிர்ப்பு தெரிவித்தோம். இப் பிரசனை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டோம்.
விவசாயிகள் பயன்படுத்தி வந்த களம் புறம்போக்கு இடத்தில் குடிசை மாற்றுவாரியம் அடு்க்குமாடி குடியிருப்பு கட்டுவது தொடர்பாக உரிய விசாரணை செய்து 8 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கலெக்டருக்கு உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நாங்கள் கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். இதைத்தொடர்ந்து, உடனடியாக பணிகளை நிறுத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். நாங்கள் விவசாய விளை பொருட்களை உலர வைப்பதற்காக பயன்படுத்தி வந்த இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதிக்க கூடாது. மேலும், தொடர்ந்து இந்த களத்தை பெரும்பள்ளம் பாசன விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறி உள்ளனர்.

Tags : building ,
× RELATED தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும்...