×

தூத்துக்குடியில் ரூ.125 கோடியில் புதிய காற்றாலைகள் அமைத்து மின்சக்தி தயாரிக்க வஉசி துறைமுகம் திட்டம்

தூத்துக்குடி, செப். 25: தூத்துக்குடியில் ரூ.125 கோடியில் புதிய காற்றாலைகள் அமைத்து மின்சக்தி தயாரிக்க  வ.உ.சி. துறைமுகம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து வஉசி துறைமுகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல், புதுப்பிக்கப்பட்ட எரிசக்தியினை பயன்படுத்துதல் என்ற நோக்கத்துடன் தூத்துக்குடி வஉசி துறைமுகம் 25 மெகாவாட் சக்தி கொண்ட காற்றாலைகளை துறைமுக கடலோரம் மற்றும் கடல் பகுதிகளில் ரூ.125 கோடியில் அமைக்க இருக்கிறது. காற்றாலைகள் நிறுவுவதற்கான சாத்தியமான பகுதிகளை கண்டறிவதற்கும், நிறுவப்பட வேண்டிய காற்றாலைகளின் திறன் மற்றும் கோபுரங்களின் உயரத்தை கணக்கிட காற்றின் திசை வேகம், வெப்பநிலை போன்ற பல்வேறு காரணிகளை ஒரு வருடத்திற்கு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. இதனை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை தேசிய காற்று சக்தி நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. இதற்காக துறைமுக பகுதியில் 2 வானிலை ஆய்வு கோபுரங்கள் நிறுவப்பட்டுள்ளன.  இதில் தகவல்களை பதிந்து சென்னையில் உள்ள தேசிய காற்று சக்தி நிறுவனத்திற்கு தகவல் அனுப்பும். இந்த ஆய்வுகள் நிறைவடையும் தருணத்தில் துறைமுகத்தில் காற்றாலைகள் அமைக்கப்படும் இடங்கள் உறுதி செய்யப்பட்டு கோபுரங்கள் நிறுவப்படும்.

வஉசி துறைமுகம் மின் கொள்முதல் ஒப்பந்தத்தின்படி ரூ.4.78 கோடியில் 500 கிலோவாட் திறன் கொண்ட மேற்கூரை சூரிய மின்சக்தி ஆலை நிறுவப்பட்டுள்ளது. இதற்காக துறைமுக பகுதியில் உள்ள பல்வேறு கட்டிடங்களின் மேற்கூரையில் 5530 சதுர மீட்டரில் 1779 சட்டங்கள் நிறுவப்பட்டுள்ளது. வஉசி துறைமுகத்தின் சூரிய மின்சக்தி மூலம் ஒரு மாதத்திற்கு தோராயமாக 5800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு வருடத்திற்கு 476 மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்படும். துறைமுக கட்டிடங்களில் மேலும் 140 கிலோவாட் சூரிய மின் ஆலை நிறுவதற்கான ஆணைகளை தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை, சென்னை நிறுவனத்திற்கு  ரூ.76 லட்சத்தில் அமைப்பதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020ம் ஆண்டு முதல் காலாண்டில் நிறுவப்பட்டு ஆண்டு ஒன்றிற்கு 2 லட்சம் அலகுகள் மின்சாரம் தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய பெருந்துறைமுகங்களுக்குள் கார்பன் தடத்தினை குறைப்பதில் முதன்மையாகவும், முன்மாதிரியாகவும் திகழும் என குறிப்பிட்டுள்ளது.

Tags : wind farms ,Tuticorin ,
× RELATED ஆணாக மாறிய தோழியிடம் இருந்து...