×

காமராஜருக்கு புதிய வெண்கல சிலை வைக்க அனுமதி கோரி ஆழ்வார்திருநகரியில் அக்.2ல் உண்ணாவிரதம்

தூத்துக்குடி, செப். 25: ஆழ்வார்திருநகரில்  சேதமான காமராஜர் சிலைக்கு பதிலாக புதிய வெண்கல சிலையை நிறுவ அனுமதி கோரி அக். 2ம் தேதி உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என்று  சிலை அமைப்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஆழ்வார்திருநகரி 3வது பஸ் நிறுத்தம் பகுதியில் கடந்த 1988ம் ஆண்டு நவம்பர் 22ம் தேதி கோவையை  சேர்ந்த அகில இந்திய இளம் தமிழர் மன்றம் சார்பில் முன்னாள் முதல்வர் காமராஜர் சிலை  சிமென்டால் அமைக்கப்பட்டது. அப்போது எம்.பி.யாக இருந்த  ஜெயலலிதா திறந்து வைத்தார். முறையான பராமரிப்பினஅறி சேதமடைந்த இச்சிலைக்கு பதிலாக வெண்கலத்தால் புதிய சிலை தயாரித்த அகில  இந்திய இளம் தமிழர் மன்றத்தினர், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அனுமதி கோரியும் பலனில்லை. இதனால் இச்சிலை தற்போது  வருவாய்த்துறையினரின் கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அகில இந்திய இளம் தமிழர் மன்றத்தினர் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில்,  முன்னாள் தூத்துக்குடி தெற்குமாவட்ட காங்கிரஸ் தலைவர்  எஸ்.வி.பி.எஸ். ஜெயக்குமார் மற்றும் சிலை அமைப்புக்குழு நிர்வாகிகள்  கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் பலமுறை மனுக்கள் அளித்தும் அனுமதி தாமதமாகி  வருகிறது. அக்டோபர் 2ம் தேதி புதிய காமராஜர் சிலையை திறக்க உள்ளோம். இதற்கு அனுமதி மறுக்கப்பட்டால் அதே நாளில் உண்ணாவிரதப்போராட்டம் நடத்தப்படும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர். மனு  கொடுக்கும் நிகழ்ச்சியில் இளம் தமிழர் மன்ற நிர்வாகி செல்வராஜ், மூத்த காங்கிரஸ் தலைவர்  ஆனந்தமூர்த்தி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் திருப்பணிசெட்டிக்குளம்  சுயம்புலிங்கம், காடுவெட்டிபிச்சையா, வைகுண்டம் ஒன்றிய இளைஞர்  காங்கிரஸ் துணைத்தலைவர் சிவன்ராஜ், முன்னாள் மாவட்ட இளைஞர் காங்கிரஸ்  தலைவர் மச்சேந்திரன், மாநில மாற்றுத்திறனாளிகள் சங்க துணைத்தலைவர்  பெர்சில், தூத்துக்குடி மாவட்ட பொருளாளர் பாலமுருகன் உள்ளிட்டோர்  உடனிருந்தனர்.

Tags : Alwarthirunagaram ,Kamaraj ,
× RELATED விருதுநகர் காமராஜர் பொறியியல் கல்லூரியில் நுண்கலை போட்டி பரிசளிப்பு