×

தோட்டக்கலை துறையில் நுண்நீர் பாசனத்திற்கு மானியம் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் தகவல்

திருவில்லிபுத்தூர், செப். 25: திருவில்லிபுத்தூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் சங்கீதா விவசாயிகளுக்காக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, உலகம் எங்கும் நாளுக்கு நாள் நீரின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சிக்கனமாக தண்ணீரை பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடியும். இது அனுபவ பூர்வமாகவும், அறிவியல் பூர்வமாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தான் அதிக மகசூலுக்கு ஒருசேர வழிவகுக்க பிரதம மந்திரியின் விவசாய நுண்நீர் பாசன திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தையும், இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்திலும் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டமானது தோட்டக்கலை துறையின் மூலம் காய்கறி, மலர்கள், பல பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனமும், வெங்காயம், கீரை, மல்லி பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசனமும் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. திருவில்லிபுத்தூர் வட்டாரத்திற்கு பிரதம மந்திரி விவசாய நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 2019-20ம் ஆண்டிற்கு ரூ.154 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயனடைய விரும்பும் விவசாயிகள், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், நிலத்தின் கணினி பட்டா, வயல் வரைபட நகல், சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர் பரப்பின் சர்வே எண்கள் வாரியாக கிராம நிர்வாக அதிகாரி வழங்கிய அடங்கல் மற்றும் புகைப்படங்கள் மூன்று, சிறு குறு விவசாயிகளாக இருப்பின் வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட சான்று, மண் மற்றும் நீர் மாதிரிகள் ஆய்வு அறிக்கை ஆகிய ஆவணங்களை திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் உள்ள அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி நுண்நீர் பாசன திட்டத்தில் பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Tags : Assistant Director ,Horticulture Department ,
× RELATED உளுந்து பயிரில் மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த வழிமுறைகள்