×

திருச்சுழி பகுதி கிராமங்களில் படையெடுக்கும் கொசுக்களால் தூக்கத்தை தொலைத்த மக்கள்

திருச்சுழி, செப்.25: திருச்சுழி பகுதியில் உள்ள கிராமங்களில் மழைக்காலம் துவங்கியுள்ளதையடுத்து கொசுக்கள் படையெடுப்பால் பொதுமக்கள் இரவு தூக்கமின்றி தவித்து வருகின்றனர். திருச்சுழி பகுதியில் உள்ள கிராமங்களில் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக மழை பரவலாக பெய்து வந்த கொசுக்கள் படையெடுப்பால் பொதுமக்கள்  பல்வேறு நோய்களை சந்திக்கும் அபாயம் உள்ளது. இது தவிர மழைக்காலம் தொடங்கினாலே ஜலதோஷம், சளி, இருமல், வைரஸ் காய்ச்சல், உடல்வலி என பல்வேறு நோய்களுக்கு ஆளாகி திருச்சுழி அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் எண்ணிகை அதிகரித்து வருகின்றது. தற்போது சூழ்நிலையில்  டாக்டர்கள்  ஆலோசனைப்படி மக்கள் கவனமாக இருக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கிராமங்களில் சுகாதாரம், சாலை சீரமைப்பு பராமரிப்பில்லாததால் மழை காலங்களில் மழைநீர் வடிய வழியில்லாமல் தெருக்கள் மற்றும் ரோட்டில் குளம் போல தேங்குகிறது. சுற்றுப்புறம் மாசுப்பட்டு குடிநீர், கழிவுநீர் ரோடு கலந்து நோய்கள் பரவுகின்றன. பருவநிலை மாறும் போது வைரஸ் போன்ற கிருமிகள் நோய்களை பரப்ப தயாராகிவிடுகின்றன.

இவ்வகை கிருமிகளால் ஊட்டச்சத்து குறைந்தவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி  குறைந்தவர்கள்  எளிதில் பாதிக்கப்படுகின்றனர்.. மழைக்காலங்களில் கொசுக்கள், எலிகள், நாய்கள், பன்றிகள் மற்றும் கால்நடைகளால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக உள்ளது. மழைக்காலங்களில் ஆங்காங்கே தேங்கும் மழைநீர், கழிவுநீருடன் கலக்கும் போது இதில் பாக்டீரியாக்கள் கலந்து விடுகின்றன. மேலும் பல இடங்களில்  தண்ணீர் மாதக்கணக்கில் தேங்கி கிடப்பதால் கொசுக்களின்  உற்பத்தி அளவுக்கு அதிகமாய் உள்ளது. இந்நேரத்தில்  டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்ற நோய்கள் ஏற்படும். கிராமங்களில் பொதுவாக வீட்டை சுற்றிலும் கருவேலம் மரங்களும் அடர்ந்து காணப்படும் அப்பகுதிகளில் எலிகள் குழிதோண்டும். அந்த பகுதிகளில் இறை தேடிவரும் பாம்புகள் வீட்டுக்குள் குடிபுகுந்து விடுகின்றன. மழைக்காலங்களில் மழைநீர்  குழிக்குள் செல்வதால், பாம்புகள் வீட்டை நோக்கி படையெடுக்கின்றன. ஊராட்சிகளில் வாறுகால் வசதி முறையாக மேம்படுத்த வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்காதவாறு பள்ளமான பகுதிகளை சீர்செய்ய வேண்டும் என கிராம மக்கள் கூறுகின்றனர்.

Tags : mosquitoes ,Trichy ,villages ,
× RELATED வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி...