×

ராஜபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மறியல், கடையடைப்பு

ராஜபாளையம், செப். 25: ராஜபாளையம் ரயில்வே மேம்பால பணி கடந்த இரு ஆண்டுகளாக நடைபெறுவதையொட்டி மலையடிப்பட்டி சாலை மாற்றுப்பாதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சாலை குண்டும், குழியுமாக இருப்பதோடு, சாலையின் இருபுறமும் மணல் நிறைந்திருக்கிறது. மேலும் இச்சாலையில் தாமிரபரணி பாதாள சாக்கடை திட்டத்திற்கு ஆங்காங்கே தோண்டி வருகின்றனர். இதனால் சாலையில் பயணம் செய்வோர், குடியிருப்போருக்கு மூச்சுத்திணறல், இருமல், சைனஸ், முதுகு தண்டுவட பாதிப்பு போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அடிக்கடி விபத்து ஏற்படுவதோடு சில நாட்களுக்கு முன்பாக சாலையில் சென்ற வாகனத்தினால் கல் தெரித்து குழந்தையின் மண்டை உடைந்தது.

மேலும் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றும் மாடத்தி என்ற பெண் சாலையில் இருந்த பள்ளத்தில் கீழே விழுந்து கால் முறிவு ஏற்பட்டு மூன்று மாதமாக மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மிக மோசமாக உள்ள சாலையை சரிசெய்யக்கோரி கடந்த 9ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முகத்திரை அணிந்து நடைபயணம் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்திற்கு பின்பும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று மறியல் போராட்டம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து மலையடிப்பட்டி நான்கு முக்கு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மறியல் போராட்டத்திற்கு பொதுமக்கள், வியாபாரிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கூடினர்.
தகவலறிந்து மறியல் நடைபெறும் இடத்திற்கு வந்த நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) நடராஜன், வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் பார்த்திபன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். பேச்சுவார்த்தையில் மலையடிப்பட்டி சாலையை சீரமைக்க 6.80 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உடனடியாக பணி துவக்கப்பட்டது.

இந்த பேச்சுவார்த்தையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, நகரச் செயலாளர் மாரியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கணேசன், பிரசாந்த் நகர் குழு உறுப்பினர்கள் சுப்பிரமணியன், சிவஞானம் மேரி ராமசுப்பிரமணியன் எஸ்எஸ்ஐ மாவட்ட செயலாளர் மாடசாமி, வாலிபர் சங்க நகரத் தலைவர் செந்தமிழ்செல்வன், கிளைச் செயலாளர் ஜெயராமன், மாதர் சங்கம் பிரியா ஆகியோர் பங்கேற்றனர். இப்போராட்டத்தில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags : Rajapalayam ,Marxist Communist Party ,
× RELATED கல்லூரி முன்னாள் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி