×

கூடலூர் அருகே அடிப்படை வசதி கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கூடலூர், செப். 25: கூடலூர் அருகே உள்ள காஞ்சிமரத்துறை பகுதியில் அடிப்படை வசதிகள் கேட்டு அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடலூர் நகராட்சியின் 21வது வார்டு பகுதியான காஞ்சிமரத்துறை பகுதியில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த குடியிருப்பு பகுதியில் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கழிப்பறை வசதி, சாலை வசதி, குடிநீர் வசதி மற்றும் மின்சார வசதி முறையாக இல்லை என காஞ்சிமரத்துறை பொதுமக்கள் சார்பில் கூடலூர் நகராட்சியில் ஏராளமான மனு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுகுறித்து இதுவரையில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத்தெரிகிறது.

இந்நிலையில் நேற்று கூடலூர்-வெட்டுக்காடு சாலையில் காஞ்சிமரத்துறை பொதுமக்கள் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என சுமார் 100க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் மற்றும் கூடலூர் நகராட்சி அதிகாரிகள் காஞ்சிமரத்துறை பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் சார்பாக கூடலூர் நகராட்சி ஆணையாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘கூடலூரில் இருந்து காஞ்சிமரத்துறை வரை சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவ சிகிச்சைக்காக கூடலூர் கொண்டு செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் குழந்தைகள் பள்ளிகளுக்கு சென்று வரவும் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் கூடலூர் சென்று வரவும் வெகு நேரம் ஆகிறது. எனவே பழுதடைந்துள்ள சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும். முறையான குடிநீர் விநியோகம், கழிப்பறை உள்ளிட்டவைகளை நகராட்சி நிர்வாகம் செய்து தர மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : road ,facilities ,Cuddalore ,
× RELATED விபத்தில் கார்பெண்டர் பலி இழப்பீடு வழங்காத அரசு பேருந்து ஜப்தி