×

கூடலூர் ஒட்டான்குளத்திற்கு மீண்டும் தண்ணீர்

கூடலூர், செப். 25: சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் வரும் தண்ணீரை மீண்டும் ஒட்டான்குளம் கொண்டு வர வேண்டும் என விவசாயிகள் அளித்த கோரிக்கையின் பேரில், வனத்துறை, வருவாய்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் சுரங்கனாறு நீர்வீழ்ச்சி தண்ணீர் வரும் பகுதியையும், மண்சரிவு ஏற்பட்ட பகுதியையும் ஆய்வு மேற்கொண்டனர். கூடலூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சுரங்கனாறு நீர்வீழ்ச்சியில் விழும் தண்ணீர் ஒட்டான்குளம் கண்மாய்க்கு நீர்வரத்தாக இருந்தது. கடந்த 2011ல் அப்பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தண்ணீர் திசைமாறி சென்று பெரியாற்றில் கலந்தது. இதனால், இக்கண்மாய்க்கு கடந்த 8 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை. பெரியாற்றில் இருந்து குறைந்த அளவு நீர்வரத்து மட்டுமே இக்கண்மாய்க்கு இருந்தது. மண்சரிவு ஏற்பட்ட பகுதி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பதால் எந்தரு பணிகளும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், சுரங்கனாறு நீர்வீழ்ச்சி தண்ணீரை மீண்டும் இக்கண்மாய்க்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் தேனி கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியிருந்தனர். இதனடிப்படையில் வனத்துறை சார்பில் உதவி வனக்காப்பாளர் மகேந்திரன், கம்பம் மேற்கு ரேஞ்சர் அன்பு, பொதுப்பணித்துறை சார்பில் உதவி செயற்பொறியாளர் அன்புச்செல்வம், உதவிபொறியாளர் கதிரேஷ்குமார், வருவாய்துறை சார்பில் தாசில்தார் உதயாராணி, துணை தாசில்தார் சுருளிநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சுரங்கனாறு நீர்வீழ்ச்சி அருகே மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதன் அறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிக்க உள்ளனர்.

Tags : Cuddalore Ottankulam ,
× RELATED தேனி புதிய பஸ்ஸ்டாண்டில் அதிகரிக்கும் ஆக்கிரமிப்பு